ஐபிஎல்லில் மும்பை: ஐந்து முறை சாம்பியனின் ஆறாவது தோல்வி!

Published On:

| By admin

ஐபிஎல் போட்டியில் நேற்று (ஏப்ரல் 16) மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 26ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை – லக்னோ அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி, இந்த ஐபிஎல் தொடரில் ஆறாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.
முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக், கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மணிஷ் பாண்டே, ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்ட கே.எல்.ராகுல் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். மணிஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
அரை சதம் கடந்த பிறகு அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 199 ரன்கள் எடுத்தது. ராகுல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதைத் தொடர்ந்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷான் களமிறங்கினர். ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 121 ரன்களாக இருந்தபோது திலக் வர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பொல்லார்டு 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற, ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆறாவது தோல்வியைச் சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. லக்னோ அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share