ADVERTISEMENT

டிஜிட்டல்  திண்ணை: வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கும் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ்

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும் பன்னீர்செல்வம் அளித்த பிரஸ்மீட் காட்சிகளின் வீடியோக்கள் வந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று கூறியிருந்தது. இதன் மூலம் பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நிலவி வந்த உட்கட்சி பூசல் ஒரு முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி வசம் கட்சி சென்றுவிட்டது.  

ADVERTISEMENT

ஆனால் இந்த தீர்ப்பில் பொதுக்குழு தான் செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதன் தீர்மானங்கள் பற்றி உச்சநீதிமன்றம் ஆராயவில்லை. தீர்மானங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடலாம்  என்றும் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி பன்னீர் தரப்பினர் அடுத்த கட்ட சட்டப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள்.

மக்கள் மன்றத்துக்கு செல்வோம் என்று பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். இதனிடையே அதிமுக என்ற கட்டமைப்பு கிட்டத்தட்ட 100% எடப்பாடி பழனிசாமியிடம் சென்று விட்ட நிலையில், ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் அதிமுகவுக்கு வரவேற்போம் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதாவது பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை தவிர அவரது ஆதரவாளர்கள் என்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை சுற்றி இருப்பவர்களில் பலரும் இனி இங்கே இருந்து சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை விட எடப்பாடி இடமோ அல்லது வேறு கட்சிகளுக்கோ சென்று அரசியல் போராட்டம் நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் பன்னீர் தரப்பில் தற்போது மிச்சமிருக்கும் ஒரு சில முக்கிய தலைவர்களை குறி வைத்து பிற கட்சிகளும் தங்களது வலையை விரிக்கத் தொடங்கிவிட்டன.

பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பு வந்த அன்று மாலை ஒரத்தநாட்டில் பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கத்துடைய மூன்றாவது மகனுக்கு  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரத்தநாடு விசாலாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில், வைத்திலிங்கத்துக்கு எதிராக கடந்த தேர்தலில் நின்று தோற்றுப் போன திமுக வேட்பாளர்  ராமசந்திரன் உள்ளிட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

ஒரத்தநாடு வட்டாரத்தில் கட்சியை விட உறவு முக்கியம் என்ற அடிப்படையில் வந்திருக்க கூடும் என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனால் பன்னீர்செல்வத்துக்கு பக்கத்தில் இருப்பவர்களில் தற்போதைய நிலையில் வலிமையானவராக இருக்கும் வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டுவர ஒரு பெரும் முயற்சி நடந்து வருகிறது.

வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது அவருடன் சக அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. டெல்டாவில் தற்போது முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருக்கும் வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டுவர அவர் தொடர்ந்து முயற்சித்து வந்தார். 

இந்த நிலையில் பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களாக அரசியல் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில்… தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த ஆட்டத்தில் இறங்கினார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன்குடி காடு தான் அன்பில் மகேஷ் பெண் எடுத்த ஊர். அந்த வகையில் இருவருக்கும் அறிதலும் புரிதலும் உண்டு‌.

தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்கு ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் வைத்திலிங்கத்திற்கு நேரிலும் போனிலும் பலமுறை அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆனால் ஏற்கனவே பன்னீர்செல்வத்தை திமுகவின் பி டீம்  என்று எடப்பாடி தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் அன்பில் மகேஷோடு அரசு விழாவில் கலந்து கொள்ள வைத்திலிங்கம் தயங்கினார்.

இப்போது பன்னீர்செல்வத்தின் அரசியல் அதிமுகவில் தாக்குப் பிடிக்குமா என்ற நிலையில் வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மீண்டும் இறங்கி இருக்கிறார் அன்பில் மகேஷ்.

டெல்டாவில் இருக்கும் திமுக புள்ளிகள் வைத்திலிங்கத்தின் வருகையை விரும்பவில்லை. எனினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைத்திலிங்கம் திமுகவினரின் ஆதரவையும் சேர்த்துதான் வெற்றி பெற்றார். இது குறித்து அப்போதே ராமச்சந்திரன் திமுக தலைவர் ஸ்டாலின் வரைக்கும் புகார் அனுப்பினார். ‌

இந்த நிலையில்  அன்பில் மகேஷ் முயற்சிக்கு தலைமை ஓகே சொன்னால் வைத்திலிங்கம் திமுகவுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.  ஏனென்றால் வைத்திலிங்கம் மீண்டும் அதிமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை. எடப்பாடி விரும்பினாலும் டெல்டா பிரமுகரான முன்னாள் அமைச்சர் காமராஜ் அதிமுகவுக்கு மீண்டும் வைத்திலிங்கம் வருவதை விரும்பவில்லை என்கிறார்கள் ‌‌

இதற்கிடையே திமுகவின் முயற்சியை போன்றே பாஜகவும் வைத்திலிங்கத்தை தங்கள் கட்சிக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறது. ஏராளமான சொத்துபத்துகளை கொண்ட வைத்திலிங்கம் பாஜகவுக்கு கிடைத்தால் அவரது செல்வாக்கையும் பாஜகவின் செல்வாக்கையும் உயர்த்த உதவும் என்று பாஜக தரப்பிலிருந்து சில கணக்குகள் போடப்பட்டு வருகின்றன‌.

வைத்திலிங்கத்தை குறிவைத்து திமுக, பாஜகவில் இருந்து நடக்கும் முயற்சிகள் தான் இவை. முடிவு வைத்திலிங்கத்தின் கையில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

100 சீட்டுக்குள் பாஜகவை விரட்ட வேண்டும்: நிதிஷ் குமார்

ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மீது அமெரிக்கா நம்பிக்கை!

Anbil Mahesh Senthil Balaji is trying to bring Vaithilingam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share