உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவுடனான தனது உறவை இந்தியா பயன்படுத்தும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டித்து கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 141 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உள்பட்ட 32 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை செயலர் டொனால்ட் லூ நேற்று (பிப்ரவரி 24) செய்தியாளர்களிடம் பேசியபோது,
“இரு நாடுகளுக்கு இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ரஷ்யாவுடனான செல்வாக்கைப் பயன்படுத்துவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதனால் மோதல் முடிவுக்கு வரும் என்பது எங்களின் நம்பிக்கை.” என்று கூறினார்.

மேலும், “ ரஷ்யா, இந்தியா இரு நாடுகளும் நீண்ட காலமாக நல்லுறவைக் கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
ஆண்டனி பிளிங்கன் மார்ச் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் G20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அப்போது உக்ரைன் ரஷ்யா மோதலில் இந்தியா ஆற்றக்கூடிய பங்கு பற்றி நாங்கள் அவர்களிடம் பேச உள்ளோம். மத்திய ஆசிய நாடுகள் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பியதோடு, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாகப் பேசின.” என்றும் டொனால்ட் லூ தெரிவித்தார்.
செல்வம்
ஹவாலா மோசடியில் ஜோயாலுக்காஸ்: சொத்துக்கள் முடக்கம்!
ஈரோடு கிழக்கு : மின்னம்பலம் சர்வே முடிவு! -மக்களின் மனக்கணக்கு இதுதான்!