தமிழ்நாட்டு அரசியலுக்கும் திருமணங்களுக்கும் ஆழமான தொடர்புண்டு. கட்சிக் கல்யாணம் என்ற கான்செப்ட்டே தமிழகத்தில்தான் பிரசித்தம்.
முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதற்குக் கூட மண விழாக்களை பயன்படுத்தும் வழக்கம் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என திராவிடர் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் அனேகருக்கு உண்டு.
இந்த பாலிடிக்ஸ் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக மன்னார்குடியில் இன்று அதிமுக நிர்வாகிகள் வீட்டுக் கல்யாணம், அதிமுகவின் இரு துருவங்களாக பிரிந்து கிடக்கும் ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் இணைக்கும் ஒரு முயற்சிக்கான முகூர்த்தமாக மாறியிருக்கிறது.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று ஆகஸ்டு 17 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்றும் கூறியது.
இதனால் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லாமல் போனது. தீர்ப்புக்குப் பின், ‘மனக் கசப்புகளை மறந்து எல்லோரும் இணைந்து செயல்படுவோம்’ என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை,. நாங்கள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கிறோம் என்கிறார்,
இந்த நிலையில்தான் இன்று (ஆகஸ்டு 21) ஆவணியின் முதல் முகூர்த்தத்தில் மன்னார்குடியில் ஓர் திருமணம் நடந்தது.
இந்தத் திருமணத்தின் மூலம் பன்னீர்செல்வத்தையும், எடப்பாடியையும் சேர்த்து வைப்பதன் முதல் முயற்சியாக டெல்டாவில் எடப்பாடி பக்கம் இருக்கும் முன்னாள் அமைச்சர் காமராஜையும், ஓ.பன்னீர் பக்கம் இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தையும் சேர்த்து வைக்க முயற்சி நடந்தது.
முன்னாள் அமைச்சர் காமராஜின் அக்காவுடைய பேத்தியும், மன்னார்குடி அதிமுக நகர செயலாளர் ஆர்.ஜி.குமாரின் சகோதரி மகளுமான பிரியங்காவின் திருமணம் இன்று நடைபெற்றது.
முன்னாள் மாவட்ட விஏஓ சங்க தலைவரும் அதிமுக பிரமுகருமான ஆவிக்கோட்டை கட்டபொம்மனின் மகன் விவேகானந்தன் தான் மாப்பிள்ளை.
இந்தத் திருமணத்துக்காக பத்திரிகையை சில வாரங்களுக்கு முன்பே அச்சடித்த கட்டபொம்மன், ‘எம்.ஜி.ஆர். அம்மா, காஞ்சி பெரியவர் ஆகியோரின் ஆசியுடன் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ்
ஆகியோர் தலைமையில் நடக்க இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் திருமணத்துக்கான பிளக்ஸ் போர்டுகளில் ஓபிஎஸ், இபிஎஸ் படங்களையும் வைத்திலிங்கம், காமராஜ் ஆகியோர் படங்களையும் இடம்பெறச் செய்தார்.
நேற்று இரவில் இருந்தே இந்தத் திருமண விழா டெல்டா மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கமும், காமராஜும் ஒரே நேரத்தில் திருமணத்துக்கு வருவார்களா…. சந்தித்துக் கொள்வார்களா என்றெல்லாம் அதிமுகவினரிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் திருமண முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜ் பத்து மணிக்கெல்லாம் கல்யாணத்துக்கு வந்துவிட்டார்.
ஆனால் வைத்திலிங்கமோ, திருத்துறைப்பூண்டிக்கு சென்று அங்கே ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு 12 மணியளவில்தான் மன்னார்குடி திருமண மண்டபத்துக்கு வந்தார்.
அதனால் காமராஜும், வைத்திலிங்கமும் திருமண விழாவில் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை.
மணமகனின் தந்தையான கட்டபொம்மனிடம் நாம் பேசினோம். “முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ் ரெண்டு பேருமே எங்களுக்கு சொந்தக்காரங்கதான்.
அந்த அடிப்படையிலயும் கட்சியில எல்லாரும் ஒண்ணாகணும்குற விருப்பத்துலயும்தான் பத்திரிகையில் ரெண்டு பேர் பேரையும் போட்டோம்.
வேற வேற நேரத்துல வந்தாலும் ரெண்டு பேரும் வந்தாங்க. வாழ்த்தினாங்க” என்றார் மகிழ்ச்சியாய்.
மன்னார்குடியில் தொடங்கியுள்ள இந்த இணைப்பு முகூர்த்த முயற்சி அதிமுக தொண்டர்கள் பக்கம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது உண்மை.
–ஆரா
அதிமுகவில் மீண்டும் இரட்டை தலைமை!