“இனி நாங்கள்தான் ஹீரோ” என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இருதரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து, வழக்கின் விசாரணையை நவம்பர் மாதம் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 30) சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முயற்சி செய்கின்றனர். ஆகவே, இதற்கு தடைவிதிக்க வேண்டும்’ என எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
ஆனால், இவர்களாகவே முன்வந்து, ’நாங்கள் தேர்தலை நடத்த மாட்டோம்’ என்று சொன்னவுடன், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இது எங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானம்,
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானம் என அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்படும்.
இதுதான் உண்மை. ஏனென்றால் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பு அனைத்தையும் முழுமையாக விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
நவம்பர் 21ம் தேதி வரவிருக்கும் இறுதித் தீர்ப்பு எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அந்த தீர்ப்பு எங்களுக்கு வெற்றியைத் தரும். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை.
இதுவரை அவர்களுக்குக் கிடைத்த நீதியினால், எங்களைப் பார்த்து ’ஜீரோ’ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். ஆனால் இனி நாங்கள்தான் ஹீரோ” என்றார்.
ஜெ.பிரகாஷ்
அடுத்த பிரதமரை முடிவு செய்யும் அணில் நாங்கள்: டிடிவி.தினகரன்
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்த உத்தரவாதம்: மனோஜ் பாண்டியன்