மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

புல்லெட் ரயில்: ஆண்டுக்கு 1.6 கோடிப் பயணிகள்!

புல்லெட் ரயில்: ஆண்டுக்கு 1.6 கோடிப் பயணிகள்!

புதிதாகத் தொடங்கவிருக்கும் புல்லெட் ரயில் சேவையில் பயணக் கட்டணமானது மக்கள் அனைவருக்கும் ஏதுவான வகையில் இருக்கும் என்றும், ஆண்டுக்கு 1.6 கோடிப் பயணிகள் புல்லெட் ரயில்களில் பயணிப்பார்கள் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருகிற 14ஆம் தேதி (நாளை மறுநாள்) இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஸோ ஏப் ஆகிய இருவரும் இந்த புல்லெட் ரயில் திட்டத்தைத் தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டுகின்றனர். இந்த புல்லெட் ரயில் திட்டம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளதோடு, குறைந்த கட்டணத்தில் துரித சேவை வழங்கும் திட்டமாக இருக்கும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. வருகிற 2053ஆம் ஆண்டுக்குள் 35 புல்லெட் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த எண்ணிக்கை 105 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் மேலும் கூறுகையில், “இந்த ரயில் சேவை எளிய மக்கள் கூட பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தைக் கொண்டதாகவே இருக்கும். குறைந்த கட்டணம் செலுத்தி விமானங்களில் பயணிக்கும் மக்களால் இந்த புல்லெட் ரயில்களிலும் பயணிக்க இயலும். ராஜ்தானி ரயில்களில் ஏ.சி. இரண்டாம் பிரிவுக்கான கட்டணத்துடன் ஒப்பிடும் வகையில் இந்த புல்லெட் ரயில் கட்டணம் இருக்கும். இந்த ரயில்களில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 1.6 கோடிப் பயணிகள் பயணிப்பார்கள். மும்பை முதல் அகமதாபாத் வரையில் சேவை வழங்கும் புல்லெட் ரயிலானது தானே, பில்மோரா உள்ளிட்ட 10 இடங்களில் நின்று செல்லும்” என்றார்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon