மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?

Published On:

| By christopher

மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?

சென்னையில் அனைத்து மாநகர பேருந்துகளும், மெட்ரோ ரயில்களும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இன்று (அக்டோபர் 16) வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து 360 கி.மீ தொலைவில் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரம் நோக்கி நகர்ந்து வருகிறது.

நேற்று தொடர் மழை பெய்து வந்த நிலையில் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் சில வழித்தடங்களில் மாநகர அரசு பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழை படிப்படியாக குறைந்து வருகிறது.

மேலும் நேற்று இரவு முதல் பல்வேறு சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் மற்றும் சுரங்க பாதைகளில் தேங்கிய நீரையும் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் விரைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சில இடங்களைத் தவிர மற்ற பகுதிகளில் சாலைப் போக்குவரத்து சீரான நிலைக்கு வந்துள்ளது.

அனைத்து பேருந்துகளும் இயங்கும்!

இந்த நிலையில், அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இன்று இயங்கும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சில வழித்தடங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்ட நிலையில், இன்று அனைத்து பேருந்துகளும் அதன் திட்டமிடப்பட்ட வழித்தடங்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணிகள் மகிழ்ச்சி!

மேலும் கனமழை காரணமாக வாடகை வாகனங்களின் இயக்கம் நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தடுமாறினர்.

இதனையறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவின் பேரில், விமான நிலையத்திலிருந்து பிராட்வே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இது விமான பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மெட்ரோ ரயில் சேவை எப்படி?

கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரை அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பச்சை வழித்தடத்தில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும், நீல வழித்தடத்தில் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் மற்றும் வண்ணாரப்பேட்டை  – ஆலந்தூர் இடையே  ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

எந்த தியாகத்திற்கும் தயார்… என்ன சொல்ல வருகிறார் எடப்பாடி?

ஆந்திராவுக்கு நகரும் கனமழை… பாதியாக குறைந்த காய்கறிகள் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share