2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வரும் அதிமுக, வரும் அக்டோபர் 17-ஆம் தேதி அன்று 53-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதனையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களை உற்சாகமூட்டும் வகையில் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், “நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது.
எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026-ல் அதிமுகவின் ஆட்சி அமைந்திடுவதை எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த கடிதம் அதிமுகவுக்குள்ளேயே இரண்டு விதமான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார்.
அதேவேளையில், தென்மாவட்டங்களில் அதிமுகவின் பலத்தை வீரியப்படுத்த ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று எடப்பாடிக்கு சீனியர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
எடப்பாடியும் 2026-ல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ்ஸும் அதிமுகவில் மீண்டும் இணைய தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறார்.
இதற்காக சர்வ தியாகத்தையும் செய்ய தான் தயாராக இருப்பதாகவெல்லாம் பேசியிருக்கிறார். அதனால் கட்சியின் நலன் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க ஓபிஎஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்க்கலாமா என்ற ஆலோசனையில் எடப்பாடி இருப்பதாகவே தெரிகிறது” என்கிறார்கள்.
அதேவேளையில் அதிமுகவிலேயே இன்னொரு தரப்பினரோ, “அதிமுக களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து வளர்கிறது. உட்பகை கொண்டவர்கள் இனி நம் இயக்கத்திற்கு வேண்டாம் என்று எடப்பாடி தெளிவாக சொல்லி விட்டார். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை” என்கிறார்கள்.
இவ்வாறு, எந்த தியாகத்திற்கும் தயார் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பதன் அர்த்தம் என்ன என அதிமுகவுக்குள்ளேயே விவாதங்கள் தொடர்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திராவுக்கு நகரும் கனமழை… பாதியாக குறைந்த காய்கறிகள் விலை!
பெங்களூரை அட்டாக் செய்யும் மழை… இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி சந்தேகம் தான்!