தொடர் கனமழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் இன்று (அக்டோபர் 16) பாதியாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது.
இதன்காரணமாக தங்களுக்கு தேவையான உணவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே அதிகளவில் வாங்கி தங்கள் வீடுகளில் மக்கள் இருப்பு வைத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விலை ஒரே நாளில் எகிறியது.
ஆனால் இன்று காலை முதல் பல இடங்களில் மழையின் அளவு குறைந்ததாலும், போதிய அளவுக்கு காய்கறிகளை இருப்பு வைத்ததாலும் இன்று சந்தையில் காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று கிலோ ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.70 குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரட் ரூ.50 – 60, வெண்டைக்காய் ரூ.40 – 50க்கு விற்கப்படுகிறது. ரூ.250க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.150க்கு விற்கப்படுகிறது.
தொடர்ந்து மழையின் அளவு குறைந்து இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில், மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆந்திராவுக்கு நகரும் கனமழை… பாதியாக குறைந்த காய்கறிகள் விலை!
பெங்களூரை அட்டாக் செய்யும் மழை… இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி சந்தேகம் தான்!