தெலுங்கு – தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஜோடியான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும், விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் தான், அவரை தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் வெகுவாகக் கொண்டு சேர்த்தது.
கீதா கோவிந்தம் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக விஜய் – ராஷ்மிகா இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியால் அடுத்ததாக டியர் காம்ரேட் படத்திலும் இணைந்து நடித்திருந்தனர்.
மறுபுறம் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களால் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸின் வசூல் இளவரசனாக மாறினார். குறுகிய காலத்திலேயே டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம்வரும் விஜய் அடுத்ததாக பேமிலி ஸ்டார், தன்னுடைய பெயரிடப்படாத 12-வது படம் என பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவருக்கும் வருகின்ற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தில் நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இருவரும் இந்த செய்திக்கு இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனால் விரைவில் விஜய்-ராஷ்மிகா இருவரும், தங்களுடைய திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நிறைய நடக்கிறது. ஆனால் இந்த ஒன்று உண்மையிலேயே சிறந்தது” என ஆணும், பெண்ணும் கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கலுக்கு 19,484 சிறப்புப் பேருந்துகள்: எங்கிருந்து எங்கு இயக்கப்படும் – முழு விவரம்!