- வழக்கறிஞர் கா. கணேசன்
(நவம்பர் 25 ஐக்கிய நாடுகள் அவையின் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் – International Day for the Elimination of Violence against Women)
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்தை வழிநடத்தும் பெண் ஆட்சியர். அவரது கையெழுத்தில் கோப்புகள் நகர்கின்றன, அவரது உத்தரவுக்காக ஒரு மாவட்டமே காத்திருக்கிறது. அத்தகைய மதிப்பிற்குரிய ஒருவரின் கைப்பேசிக்கே ஆபாசச் செய்திகள் வந்து விழுந்தால், அவர் யாரிடம் முறையிடுவார்? முறையிட்ட பிறகும், அவரது புகார் இருக்கிறதா இல்லையா என்று நீதிமன்றத்தில் விவாதம் நடந்தால், அவர் எவ்வளவு தனிமைப்பட்டுப் போயிருப்பார்?
அதிகாரப் பதவியில் இருக்கும் பெண்ணுக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? இந்தக் கேள்வியை இன்றைய தொழில்நுட்பம் இன்னும் அச்சுறுத்தலாக்கியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒருவரின் முகத்தையோ குரலையோ பயன்படுத்தி உருவாக்கப்படும், உண்மைபோலத் தோன்றும் போலிப் படங்களும் காணொளிகளும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) எனப்படுகின்றன. இன்று ஒரு பெண்ணின் ஒரே ஒரு புகைப்படம் போதும். அதை ஆபாசமாகச் சித்தரித்து, அவர் செய்யாத ஒன்றைச் செய்ததாகக் காட்டி, அவரது நற்பெயரையும் மாண்பையும் சிதைக்க முடியும். பெண்களின் புகைப்படங்களே அவர்களை அச்சுறுத்தவும் அவமானப்படுத்தவும் பயன்படும் ஆயுதங்களாக மாறியுள்ளன.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பில்லையா?
2026-ஆம் ஆண்டு நவம்பரில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாகவும் செய்திகள் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த உறுப்பினர், இவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறினார். இவை குற்றச்சாட்டுகள் மட்டுமே; விசாரணையும் நீதிமன்றமும் உண்மையைத் தீர்மானிக்கும். ஆனால், புகாரைக் கையாண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு கட்டடத்தில் தீப்பற்றினால், யாராவது புகார் அளிக்கிறார்களா என்று காத்திருக்காமல் உடனே அணைக்கத் தொடங்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிலும் அரசின் அணுகுமுறை இதுவாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அரசு மௌனம் காத்தது. பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி (POSH) அரசு தானாகவே முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

நவம்பர் 23 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமைச் செயலாளருக்கோ காவல்துறைக்கோ புகார் வரவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளின் பிற்பகுதியில், ஆட்சியர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததாகச் செய்திகள் வெளியாயின. நவம்பர் 24 அன்று அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. விசாரணையை மூத்த காவல் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. புகார் அளிக்கப்பட்டதா இல்லையா என்பதிலேயே முரண்பட்ட தகவல்கள் நீதிமன்றத்தில் வெளிவந்தது, அரசு இயந்திரத்தின் ஒருங்கிணைப்பின்மையையும் பொறுப்புக்கூறலில் உள்ள இடைவெளியையும் வெளிச்சமிடுகிறது. ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாரே ஏன் தாமதத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாக வேண்டும்?
இந்தச் சம்பவம் டீப்ஃபேக் தொடர்பானது அல்ல. ஆனால் வேர் ஒன்றுதான்: பெண்ணின் உடல், தனியுரிமை, மாண்பை மதிக்க மறுக்கும் மனநிலையும், அவளது புகாரை அவசரமாகக் கருதாத அமைப்பும். அந்த அலட்சியம் எவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்குப் பத்தாண்டுகளுக்கு முன் சேலத்தில் நடந்த சம்பவம் சாட்சியாக நிற்கிறது.

ஒரு போலிப் படம் பறித்த உயிர்
2016 ஜூன். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பட்டப்படிப்பை முடித்து, எதிர்காலக் கனவுகளுடன் புதிய வாழ்க்கைக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது அவரது தோழிகள் ஓர் அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார்கள். முகநூலில் அவரது முகம், வேறொரு பெண்ணின் நிர்வாணப் படத்துடன் இணைக்கப்பட்டு ஒரு போலி ஆபாசப் படமாகப் பகிரப்பட்டிருந்தது. அதனுடன் அவரது தந்தையின் கைப்பேசி எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது. தந்தை உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் சில நாள்களிலேயே அவரை மேலும் ஆபாசமாகச் சித்தரிக்கும் மற்றொரு போலிப் படமும் வெளியானது. புகார் அளித்த நான்கே நாள்களில் அந்த இளம்பெண் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த அவமானத்தையும் துயரத்தையும் தன்னால் எதிர்கொள்ள முடியவில்லை என்று அவர் எழுதி வைத்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. உரிய நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் தன் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்று தந்தை வேதனையுடன் குற்றம்சாட்டினார். அவள் உயிரிழந்த நாளில்தான் போலிப் படங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன. இரண்டு நாள்கள் கழித்துதான் ஒருவர் கைது செய்யப்பட்டார். புகாருக்கும் நீக்கத்துக்கும் இடைப்பட்ட அந்த நான்கு நாள்களில் ஒரு குடும்பத்தின் உலகமே நொறுங்கிப்போனது.
இது குறும்பு அல்ல; தாக்குதல்
ஒரு பெண்ணின் முகத்தை அவரது அனுமதியின்றி ஆபாசப் படத்துடன் இணைத்துத் திரித்துப் பரப்புவது இணையத்தில் செய்யப்படும் விளையாட்டோ, கேலியோ அல்ல. அது அவரது தனியுரிமை, மாண்பு, நற்பெயர், மனநலம் என அனைத்தின் மீதும் நடத்தப்படும் கடுமையான தாக்குதல். இந்த ஆண்டுகூட, திரிக்கப்பட்ட படம் என்பது பாதிப்பில்லாத இணையக் குறும்பு அல்ல; ஒரு பெண்ணின் தனியுரிமை, நற்பெயர், உணர்வுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பத்தாண்டுகளுக்குப் பிறகும், இந்த அடிப்படை உண்மையை நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருப்பது, நமது சமூகத்தின் மனநிலையையும் பெண்களின் பாதுகாப்பு குறித்த நமது புரிதலையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
அன்று திறமை தேவைப்பட்டது; இன்று AI போதும்
சேலம் இளம்பெண்ணுக்கு நேர்ந்தது தனிச் சம்பவம் அல்ல; மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் முன்னோட்டம். அன்று ஒரு புகைப்படத்தைத் திரித்துப் போலி ஆபாசப் படமாக்க ஓரளவு தொழில்நுட்பத் திறமையும் நேரமும் தேவைப்பட்டன. இன்று செயற்கை நுண்ணறிவு அந்தத் தடைகளைப் பெருமளவில் அகற்றிவிட்டது. ஒரே ஒரு புகைப்படத்தை வைத்து, உண்மைபோலத் தோன்றும் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் சில நிமிடங்களில் உருவாக்கலாம். சிறப்புத் திறமையில்லாதவர்கள்கூட இதைச் செய்ய முடிவதால், ஆபத்து பல மடங்கு பெருகியுள்ளது.

எண்கள் சொல்லும் உண்மை
சைபர் பாதுகாப்பு ஆய்வுகளின்படி, 2020 காலக்கட்டத்தில் இணையத்தில் பரவிய டீப்ஃபேக் காணொளிகளில் 90 முதல் 95 சதவீதம் வரை ஒப்புதலின்றி உருவாக்கப்பட்ட ஆபாச உள்ளடக்கங்கள்; அவற்றில் சுமார் 90 சதவீதம் பெண்களைக் குறிவைத்தவை. நிலைமை அதன் பின் இன்னும் மோசமடைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு ஆய்வின்படி, இணையத்தில் கண்டறியப்பட்ட 95,820 டீப்ஃபேக் காணொளிகளில் 98 சதவீதம் ஆபாச உள்ளடக்கம்; அவற்றில் சித்தரிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பெண்கள். 2019 முதல் 2023க்குள் டீப்ஃபேக் காணொளிகளின் எண்ணிக்கை 550 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவை தொழில்நுட்ப வளர்ச்சியின் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையின் கருவியாக எவ்வளவு வேகமாக மாறியுள்ளது என்பதன் எச்சரிக்கை மணி.
வேர் எங்கே இருக்கிறது?
ஆணாதிக்கச் சிந்தனை, பாலினப் பாகுபாடு, சாதிய ஆதிக்கம், மத அடிப்படையிலான ஒடுக்குமுறை, வர்க்க ஏற்றத்தாழ்வு, சமத்துவமற்ற அதிகார உறவுகள், அரசியல் காழ்ப்புணர்வு ஆகியவையே பெண்களுக்கு எதிரான வன்முறையின் அடிப்படைக் காரணங்கள். தொழில்நுட்பம் இந்த வன்முறையைப் புதிதாக உருவாக்கவில்லை. சமூகத்தில் ஏற்கெனவே வேரூன்றியுள்ள பெண் வெறுப்பையும் பாகுபாடுகளையும் மேலும் கூர்மைப்படுத்தும் கருவியாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
பட்டியலின, பழங்குடியினப் பெண்கள் சாதிய ஒடுக்குமுறையையும் பாலினப் பாகுபாட்டையும் ஒருசேர எதிர்கொள்கின்றனர். அவர்களின் சாதி அடையாளத்தையும் உடலையும் இழிவுபடுத்துவது, பாலியல் மிரட்டல் விடுப்பது, குரலை ஒடுக்குவது ஆகியவை இணையவெளியிலும் தொடர்கின்றன. மதச் சிறுபான்மையினப் பெண்கள் மத அடையாளத்தின் பெயரால் வெறுப்புப் பேச்சு, பாலியல் அவதூறு, மிரட்டல்களுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு பாலினம், சாதி, மதம், வர்க்கம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து ஒடுக்குமுறையைப் பல அடுக்குகளாகத் தீவிரப்படுத்துகின்றன.
பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைப் பரப்பும் இணையக் குழுக்களும் ஆபத்தானவை. இளைஞர்களிடையே பெண்களின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எதிர்க்கும் மனப்பான்மையை இவை வளர்க்கின்றன. பெண்களின் உரிமைகளை ஆண்களுக்கு எதிரானதாகச் சித்தரிப்பது அடிப்படையிலேயே தவறு. பாலினச் சமத்துவம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல; பெண்களும் ஆண்களும் சம உரிமையுடனும் சம வாய்ப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதிசெய்வது.

தொழில்நுட்பத்தை உருவாக்குவோர் யார்?
தொழில்நுட்பத் துறையின் உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உயர் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. UNESCO-வின் 2021 அறிவியல் அறிக்கையின்படி, உலகளவில் பொறியியல் பட்டதாரிகளில் 28 சதவீதத்தினரும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றுவோரில் 22 சதவீதத்தினரும் மட்டுமே பெண்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 2026 அறிக்கையின்படி, இத்துறையின் மூத்த தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்கு 14 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இது வெறுமனே வேலைவாய்ப்பில் நிலவும் பாலினச் சமத்துவமின்மை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; தொழில்நுட்பத்தின் தன்மை, அதன் பயன்பாடு, அது உருவாக்கும் வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் ஆகியவற்றையும் தீர்மானிக்கும் முக்கியமான பிரச்சினையாகும். ஏனெனில், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களின் சமூகப் பின்னணி, பார்வை மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் அதன் வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளிலேயே பாலினப் பாகுபாடுகள் இடம்பெற்றிருந்தால், அவை அதன் முடிவுகளிலும் பிரதிபலித்து, ஏற்கெனவே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் வலுப்படுத்தக்கூடும்.
எனவே, தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும், அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதிலும், அது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் பெண்களின் சமமான பங்கேற்பை உறுதிப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பின்னணிகளைச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களுக்கும் தேவைகளுக்கும் உரிய இடமளிக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் ஒரு சிலரின் பார்வையையும் தேவைகளையும் மட்டுமே பிரதிபலிப்பதாக இல்லாமல், அனைவரின் உரிமைகளையும், பாதுகாப்பையும், சம வாய்ப்புகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அப்போதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி உண்மையான சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

உலகம் காட்டும் வழிகள்
சில நாடுகள் இணையவழி வன்முறையைத் தடுக்க முக்கியமான சட்டங்களை இயற்றியுள்ளன.
- மெக்சிகோ: ‘ஒலிம்பியா சட்டம்’ (Olimpia Law), ஒப்புதலின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்வது உள்ளிட்ட இணையவழிப் பாலியல் வன்முறைகளைத் தண்டனைக்குரிய குற்றமாக்கியுள்ளது.
- அமெரிக்கா: 2025ஆம் ஆண்டின் ‘TAKE IT DOWN’ சட்டம், ஒப்புதலின்றி உண்மையான அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அந்தரங்கப் படங்களைப் பகிர்வதைத் தடை செய்கிறது. புகார் அளிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்கும் பொறுப்பையும் குறிப்பிட்ட இணையத் தளங்களுக்கு விதிக்கிறது.
- பிரிட்டன்: 2023ஆம் ஆண்டின் ‘இணையப் பாதுகாப்புச் சட்டம்’ (Online Safety Act) இணையத் தளங்களின் பாதுகாப்புப் பொறுப்புகளை வலுப்படுத்தியது. 2025ஆம் ஆண்டு சட்டத் திருத்தம், ஒருவரின் ஒப்புதலின்றி அவரைப் போன்ற தோற்றமளிக்கும் போலியான அந்தரங்கப் படங்களை உருவாக்குவதையும் குற்றமாக்கியது.
- ஐரோப்பிய ஒன்றியம்: ‘செயற்கை நுண்ணறிவுச் சட்டம்’ (AI Act), செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட படங்கள், காணொளிகளை அடையாளம் காணும் வகையில் வெளிப்படுத்த விதிகள் வகுத்துள்ளது. ‘டிஜிட்டல் சேவைகள் சட்டம்’ (Digital Services Act), சட்டவிரோத உள்ளடக்கப் புகார்களைக் கையாளவும் தளங்களின் பொறுப்பை உறுதிப்படுத்தவும் வழிவகுக்கிறது.
- ஆஸ்திரேலியா: ‘eSafety Commissioner’ அமைப்பு, ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்கள், இணையவழித் துன்புறுத்தல் குறித்த புகார்களைப் பெற்று, அவற்றை நீக்க உத்தரவிடும் அதிகாரம் கொண்டது.
இந்தச் சட்டங்களின் பொதுவான அம்சம் ஒன்றுதான்: இணையவழி வன்முறையைத் தனிநபரின் பிரச்சினையாகப் பார்க்காமல், அரசும் தொழில்நுட்ப நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டிய உரிமை மீறலாக அணுகுகின்றன. இந்த அணுகுமுறையையே நாமும் பின்பற்ற வேண்டும்.
யாருக்கு என்ன பொறுப்பு?
தொழில்நுட்ப நிறுவனங்கள்: பெண்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் தொழில்நுட்ப வடிவமைப்பிலேயே உறுதிசெய்ய வேண்டும். ஒப்புதலின்றிப் பகிரப்படும் ஆபாசப் படங்கள், காணொளிகள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலி அந்தரங்கப் படங்களை விரைவாகக் கண்டறிந்து நீக்கும் வலுவான நடைமுறைகள் வேண்டும். நீக்கப்பட்ட படங்கள் மீண்டும் பதிவேற்றப்படாமல் தடுக்கும் ஏற்பாடும் தேவை. புகார் அளிக்கும் வழிமுறை எளிமையாகவும், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.
இந்திய அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2025 நவம்பரில், ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்களை விரைவாக நீக்குவதற்கான வழிகாட்டு நடைமுறையை (SOP) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டது. 2026ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இத்தகைய குறிப்பிட்ட புகார்களில் சம்பந்தப்பட்ட தளங்கள் இரண்டு மணி நேரத்துக்குள் அந்த உள்ளடக்கத்தை நீக்கவோ அணுகலை முடக்கவோ வேண்டும்.
சேலம் இளம்பெண்ணின் வழக்கை இங்கே நினைவுகூர வேண்டும். அவர் உயிரிழந்த நாளில்தான் போலிப் படங்கள் நீக்கப்பட்டன. புகார் அளித்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்வி இன்றும் நம்மை உலுக்குகிறது. சில மணி நேரத் தாமதம்கூட ஒரு உயிரைப் பறிக்கலாம். எனவே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வணிக நலனுக்கு இணையாக, மனித உயிருக்கும் தனியுரிமைக்கும் கண்ணியத்துக்கும் முன்னுரிமை தர வேண்டும்.
அரசு: சட்டங்களை வலுப்படுத்துவதுடன், இணையவழிக் குற்றங்களைக் கையாள்வதில் காவல்துறைக்குத் தொடர்ச்சியான பயிற்சி அளிக்க வேண்டும். புகார் வந்தவுடன் விரைந்து விசாரிக்கவும், ஆதாரங்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் தெளிவான நடைமுறைகள் வேண்டும். பணியிடப் பாலியல் புகார்களில், புகார் வரும் வரை காத்திருக்காமல் செயல்படும் பொறுப்புணர்வு வேண்டும்.
கல்வி நிறுவனங்கள்: இணையப் பாதுகாப்பு, ஒப்புதல், தனியுரிமை, பாலினச் சமத்துவம் ஆகியவை குறித்து மாணவர்களுக்குச் சிறுவயதிலிருந்தே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறரின் உரிமைகளை மதித்தல், சமத்துவம், சகிப்புத்தன்மை, தனி மனித மாண்பு, சகோதரத்துவம் உள்ளிட்ட அரசமைப்பு விழுமியங்களை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில், அரசமைப்பு உரிமைக் கல்வியைப் பள்ளிகளில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும். வெறுமனே பாடங்களைப் போதிப்பதோடு நின்றுவிடாமல், உரிமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து, பாலினப் பாகுபாடுகளையும் வன்முறைகளையும் நிராகரித்து, சமத்துவமும் மனித மாண்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் பங்கேற்கும் குடிமக்களாக வரும் தலைமுறையினரை வளர்த்தெடுக்கத் தேவையான கல்விசார் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
குடும்பமும் சமூகமும்: இணையவழி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதோ, அவமானப்படுத்துவதோ, அவர்களையே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதோ கூடாது. மாறாக, அவர்களுக்குத் துணையாக நின்று, தேவையான உளவியல், சமூக மற்றும் சட்டரீதியான ஆதரவை வழங்க வேண்டும். குற்றத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியது பாதிக்கப்பட்டவர் அல்ல; குற்றம் செய்தவரே. பெண்களை இழிவுபடுத்தும், அவர்களின் மாண்பையும் தனியுரிமையையும் பாதிக்கும் பதிவுகளைப் பகிர்வதையோ பரப்புவதையோ ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். இத்தகைய உள்ளடக்கங்களைக் காணும்போது மௌனம் காக்காமல், அவற்றை எதிர்த்துக் குரல் கொடுப்பதுடன் உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம் சாட்டும் மனநிலையை மாற்றி, குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்யும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்க வேண்டும்.
முடிவாக, ஒரு பெண்ணின் முகத்தை அவரது அனுமதியின்றி ஆயுதமாக்கும் குற்றத்தைத் தடுக்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் உண்டு. இணையவெளி வன்முறை வெறும் இணையப் பிரச்சினையல்ல; அது தனியுரிமை, மாண்பு, சமத்துவம் ஆகிய அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல். எந்தத் தொழில்நுட்ப நிறுவனமும் இந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
கள்ளக்குறிச்சியில் ஒரு ஆட்சியர் தன் புகாருக்கு நீதிகிடைக்கக் காத்திருக்கிறார். சேலத்தில் ஒரு தந்தை மகளை இழந்து பத்தாண்டுகளாக அந்த வேதனையைச் சுமக்கிறார். புகார் அளித்த நான்கே நாள்களில் ஒரு குடும்பத்தின் உலகமே சிதைந்த துயரம் வேறெந்தக் குடும்பத்துக்கும் நேரக்கூடாது. ஒரு பெண்ணின் புகைப்படம் அவரது வாழ்க்கையைச் சிதைக்கும் ஆயுதமாக மாறாமல் காப்பதும், இத்தகைய குற்றங்களுக்குத் தண்டனையின்மை என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு.
கட்டுரையாளர் குறிப்பு

கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள், குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைகளில் களப்பணியாற்றி வருபவர். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தி, தலையீடுகளை மேற்கொண்டுள்ளார். கனடா, நெதர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சர்வதேசப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளார். தமிழக அரசின் மாநிலத் தத்தெடுப்பு வள ஆதார அமைப்பில் மாநிலத் திட்ட மேலாளராகவும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மனித உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் தொடர்பான பயிற்சியாளரும் எழுத்தாளருமான இவர், ‘நாமும் நாடும்’ நூலின் ஆசிரியர். தற்போது வான்முகில் அமைப்புடன் இணைந்து குழந்தைகளிடையே அரசமைப்பு உரிமைக் கல்வியை முன்னெடுத்து வருகிறார்.









