ஈரோட்டில் கலைஞர் சிலை சேதம் – திமுகவினர் போராட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 24 Nov 2026, 7:36 PM

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலைகளில் உள்ள மூக்குக் கண்ணாடியை உடைத்ததுடன், நூலகங்கள் மற்றும் திமுக அலுவலகத்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா, அம்பேத்கர், கலைஞர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வந்த மர்ம நபர், கலைஞரின் சிலையில் இருந்த மூக்குக் கண்ணாடியை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல், ஈரோட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொடக்குறிச்சி ஆலங்காட்டுவலசு பகுதியில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நூலகத்துடன் கூடிய கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையிலும் மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள நூலகத்தின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக தெற்கு மாவட்டத் தலைமை அலுவலகத்தின் கதவுக் கண்ணாடிகளும், முனிசிபல் காலனியில் கலைஞர் சிலையின் கீழ் அமைந்துள்ள நூலகத்தின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இவ்வாறு நான்கு இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, தனிநபர் ஒருவர் இரும்புக் குழாயைக் கொண்டு கலைஞர் சிலையின் மூக்குக் கண்ணாடியை உடைக்கும் காட்சிகள் வெளியாகின.

திமுகவினர் சாலை மறியல்!

ஈரோட்டில் கலைஞர் சிலைகள் மற்றும் திமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திமுகவினர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி, சேதப்படுத்தப்பட்ட சிலைகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி, “மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சிலையைச் சேதப்படுத்தியதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரே நபர் பல்வேறு இடங்களுக்குச் சென்று, குறிப்பாகக் கலைஞர் சிலைகளை மட்டும் சேதப்படுத்தியது குறித்து திமுகவினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரை விரைந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதற்கு இச்சம்பவமே சாட்சி” என்றார்.

போலீசார் விளக்கம்:

இதற்கிடையே, ஈரோடு மாவட்டக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (24.11.2026) ஈரோடு மாவட்டத்தின் நான்கு இடங்களில் உள்ள கலைஞர் சிலைகள், நூலகம் மற்றும் கட்சி அலுவலகக் கட்டடங்களின் கண்ணாடிப் பேனல்கள் அடையாளம் தெரியாத நபரால் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், சிலைகளை சேதப்படுத்திய நபர் மொடக்குறிச்சி எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஹரி பிரசாத் என்பது தெரியவந்தது. மேலும், நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது, ஹரி பிரசாத் தனது சொந்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகளையும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட நபரை ஈரோடு மாவட்டக் காவல்துறையினர் தற்போது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவருகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாகச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel