உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலை கோயில் முழுவதும் மின்விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் சுமார் 310 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்த்தாலான கொப்பரைக்கு நேற்று அதிகாலை கோயிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை 4500 கிலோ நெய், தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் 1500 மீட்டர் காடா துணி ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபத்தைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தீபம் ஏற்றப்படும்போது, “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, ஜோதி வடிவத்தில் இறைவனைத் தரிசித்தனர். திருவண்ணாமலை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த், ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பக்தர்களின் பாதுகாப்புப் பணியில் வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் 15,500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரம் மற்றும் கோயில், கிரிவலப் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாநகரமே காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.









