மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து திருப்பரங்குன்றம் விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் இன்று ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தில் 144 தடை விதிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் 144 தடை உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.டி.சுமதி அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள துணிவு இருக்கிறது போல என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
இந்தநிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான்.
ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.









