கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசுவோம் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“முதலமைச்சர் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதைத் தாண்டி, இன்று நீதிமன்றமும் தேசிய மகளிர் ஆணையமும் இதைக் கையில் எடுக்கும் வரை, எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இதைப் பேசும் வரைக்கும், ‘பெண்களைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்’ என்று சொல்லும் முதல்வர் விஜய் வாயை மூடிக்கொண்டு இருந்தார்.
ஒரு கலெக்டருக்குக் கூட இந்தத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, ஒரு கலெக்டராலேயே புகார் அளிக்க முன்வர முடியவில்லை. அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. புகார் அளிக்க ஒரு கலெக்டருக்கே பயமாக இருக்கிறது என்ற மிக மோசமான சூழ்நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ‘பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய முதலமைச்சர் விஜய் என்ன செய்யப் போகிறார்? இதற்கு என்ன பொறுப்பு ஏற்கப் போகிறார்?
இத்தனை நாட்களாக அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஒரு அரசாங்கத்தின், அத்தனை அமைச்சர்களும் பொய் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால், ‘ஜூலை மாதம் 31-ஆம் தேதியே முதன்முதலாக இது குறித்துத் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருக்கிறேன்’ என்று நீதிமன்றத்தில் ஆட்சியர் தெளிவாகச் சொல்லக்கூடிய சூழலில், இத்தனை மாதமாக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன்னுடைய எம்.எல்.ஏ-வைக் காப்பாற்றுவதிலேயே குறியாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும்தான் முக்கியம். அப்படியென்றால், பெண்கள் பாதுகாப்பைக் குறித்துப் பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியோ, அருகதையோ உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதிகள் யாரையும் காப்பாற்ற அரசு முயற்சிக்க வேண்டாம் என்று சொன்னது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர்:
“சில நாட்களுக்கு முன்பு பெண் நீதிபதியே அது குறித்துப் பேசியபோது, அவர்களையும் விமர்சனம் செய்தார்கள். நீதிமன்றத்தில் இன்று அரசாங்கத்தைப் பார்த்து ‘நீங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றக் கூடாது’ என்று நீதிபதியே சொல்லக்கூடிய ஒரு கேவலமான நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
நியாயமாக நீதிமன்றமே இதைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. அதைத் தாண்டி தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. யார் யார் கமிட்டியில் இருக்க வேண்டும், எப்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையே இல்லாததால்தான் நீதிமன்றம் இத்தனை நிபந்தனைகளைப் போட்டுள்ளது. அதற்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாததே காரணம். தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் யாராவது குற்றவாளியைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் இதை மிகப்பெரிய அளவில் கையில் எடுக்கும். இதை இதோடு நாங்கள் விட்டுவிட மாட்டோம். இது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேசுவோம்” என்றார்.
மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும்தான் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுவது குறித்த கேள்விக்கு, “த.வெ.க-வின் ஆட்சி நடக்கிறது; உங்களுக்குத் தேவையான யாரை வேண்டுமானாலும் நீங்கள் அதிகாரியாக நியமித்துக் கொள்ளலாம். அதிகாரிகளைப் பொறுத்தவரை யார் அரசாங்கத்தில் இருந்தாலும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நியாயமாக வேலைகளைச் செய்ய வேண்டியவர்கள். அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், அவர்களுக்கு எப்படி இந்த அரசு மீது நம்பிக்கை வரும்? இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இந்த அரசின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால்தான் இத்தனை நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பிக்கொண்டு இருந்தோம். ஆரம்பத்தில் ‘புகார் அளிக்கட்டும், புகார் அளிக்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டு, ஒரு பக்கம் புகார் அளிக்க இயலாத வகையில் பல அழுத்தங்களைக் கொடுத்தனர். இன்று எல்லாவற்றையும் மீறி ஆட்சியர் புகார் அளித்த பிறகு, நீதிமன்றம் தலையிட்ட பிறகு, வேறு வழியில்லாமல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யவில்லை என்று நினைக்கிறேன்” என்றார்.
இந்த விவகாரம் குறித்து முதல்வருக்குத் தெரிந்திருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “சி.எம். கவனத்திற்கு (CM knowledge) எது போகிறது, எது போகவில்லை என்பதை அவர் வாயைத் திறந்து பேசினால்தான் தெரியும். அவருக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் அதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.









