ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது போலீஸ் வழக்கு பதிவு- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்!

By Mathi

|

Published on 24 Nov 2026, 11:02 AM

TVK MLA Arul Vignesh-High Court-Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 24) தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, அதே தொகுதியின் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாகவும், அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் நேற்று (நவம்பர் 23) விசாரித்தார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன், மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ, தலைமைச் செயலாளருக்கோ எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடமும் தலைமைச் செயலாளரிடமும் நேரடியாக விளக்கம் பெற்று நவம்பர் 24-ந் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஆட்சியர் புகார்.. எம்.எல்.ஏ. மீது வழக்கு

இந்த நிலையில், நேற்று பிற்பகல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக எழுத்துப்பூர்வமான புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையே, நேற்று ஒத்திவைக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “கள்ளக்குறிச்சி ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel