கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு பாராட்டு! தவெக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?- கனிமொழி, தமிழிசை கேள்வி

By Pandeeswari Gurusamy

|

Published on 24 Nov 2026, 11:09 AM

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் புகார் அளித்துள்ள முதல்வர் விஜய் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா என கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் பதிவில், “தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

ADVERTISEMENT

அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.

ADVERTISEMENT

இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் விஜய், இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், “இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது… குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்….?.. பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்..?

மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விஜய் இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்… பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால்… சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்?… தாமாக புகார் அளிப்பது கூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன?… தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார்” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel