பெரியார் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

By Mathi

|

Published on 24 Nov 2026, 10:57 AM

Periyar Statue- Supreme Court

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் நிலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே திருக்கண்டியூரில் பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே திராவிடர் கழகம் சார்பில் 1990-ஆம் ஆண்டு தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது.

ADVERTISEMENT

இந்த சிலை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளதாகக் கூறி, அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 8-ந் தேதி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, பெரியார் சிலை அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமான நிலமா? அல்லது அரசு புறம்போக்கு நிலமா? என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பெரியார் சிலை அரசு புறம்போக்கு நிலத்தில் இல்லை என்றும், பிரம்மசிரகண்டீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வு அறிக்கையைத் தொடர்ந்து அக்டோபர் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில், கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் கோயில் நிலத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ADVERTISEMENT

எனவே, பெரியார் சிலையைப் பாதுகாப்பாக அகற்றி, வேறு பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

இந்த நடவடிக்கையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், சிலை அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், 4 வாரங்களுக்குப் பின்னர் இந்த வழக்கை மீண்டும் பட்டியலிட்டு, நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

இந்த நிலையில், கோயில் நிலத்தில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக நவம்பர் 22-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு (Special Leave Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel