கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: வடக்கு மண்டல ஐஜி மேற்பார்வையில் விசாரணை – உயர் நீதிமன்றம் அதிரடி!

By Kavi

|

Published on 24 Nov 2026, 12:25 PM

arul vignesh

வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபிநவ் மேற்பார்வையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் அருள் விக்னேஷுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க டிஜிபிக்கு உத்திரவிட வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நேற்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

ADVERTISEMENT

அப்போது, ”பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் ஆதாரங்களை வைத்து நீங்கள் வேண்டுமானால் வழக்கு தொடரலாம். ஆனால் என்னால் அப்படி செயல்பட முடியாது. ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக உங்களுக்கு எப்படி தெரியும் அதற்கு ஆதாரம் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் நீதிபதி லட்சுமி நாராயணன். 

மேலும் மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனிடம், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளரிடம் மீண்டும் ஒருமுறை விசாரித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவை பிறப்பித்தார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் மீண்டும் இன்று (நவம்பர் 24) நீதிபதி லட்சுமிநாராயணன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்தார். 

இதை கேட்ட நீதிபதி, ”பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் காவல்துறை அதை (எஃப் ஐ ஆர்) இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்காது என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட கூடாது” என்று தெரிவித்தார். 

அதாவது, ”பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆபாசமான செய்திகள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு அரசு சார்பில், காவல்துறை அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே சில நொடிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு விடுகின்றன என்று தெரிவித்தார். 

இதற்கு நீதிபதி, ”பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதில் என்ன பயன். அரசே தாமாக முன்வந்து அந்த பதிவுகளை ஏன் நீக்கவில்லை. இத்தகைய பதிவுகள் மூலம் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் கண்ணியம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். 

”பாதிக்கப்பட்டவர் கடந்த ஜூலை மாதமே புகார் அளித்திருக்கிறார். ஆனால் இத்தனை மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் அவர் புகார் அளிக்கும் சூழ்நிலை வந்திருக்காதே.  தவறு செய்தவர்கள் யாரையும் காப்பாற்ற கூடாது” என்று எச்சரித்தார்.

மேலும், ”பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் POSH சட்டத்தின் கீழ் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதா” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அத்தகைய குழு இதுவரை ஏன் அமைக்கப்படவில்லை. 

அவர் தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, தூய்மை பணியாளராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த பதவியில் இருந்தாலும் சரி அவர் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்துபாதுகாக்கப்பட வேண்டும். இந்த உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உரியது. 

அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் பாலியல் துன்புறுத்தல் நடந்து விட்டதாக நான் உறுதியாக கூறவில்லை. ஆனால் இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டார். 

மேலும் எந்த அதிகாரி இந்த வழக்கை விசாரிக்கிறார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 

இதற்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட போது, இந்த வழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடையது. எனவே காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு மேலே இருக்கும் உயர் அதிகாரி ஒருவர் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 

ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்திலான உயர் அதிகாரி தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார். 

தொடர்ந்து வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபிநவ் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான அனைத்து ஆபாசமான பதிவுகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel