கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் முதல்வர் விஜய்யும் குற்றவாளிதான் என அதிமுக எம்பி இன்பதுரை குற்றம் சாட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச மெசேஜ் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை எம்.பி., “இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அமைச்சர் பெருமக்கள் பேசினர். த.வெ.க. அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்ட அத்தனை பேரும் ஒன்றுமே நடக்கவில்லை என்றனர். அப்படியானால், குற்றவாளிக்குத் துணையாக இந்த அமைச்சர்கள் செயல்பட்டுள்ளனர் என்றுதானே அர்த்தம். எனவே, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; உடனடியாக எம்எல்ஏவைக் கைது செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
நாங்கள் இதை அரசியலுக்காகப் பேசவில்லை. நீதியைப் பெற்றுத்தர யார் வருவார்? மாவட்ட உயர் அதிகாரிக்கு இந்த நிலைமை என்றால், தனிமனிதன் வெளியில் வந்து பேச முடியுமா? அவரே புகார் கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். ஒரு வழக்கறிஞர் மூலமாக இதை நாங்கள் வெளியில் கொண்டு வந்தோம். இதில் வேறு எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை.
தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது; அதனால் எங்கள் பணி முடிந்தது. ஆனால், இந்த வழக்கை இவ்வளவு நாள் பதிவு செய்யாமல் வைத்திருந்ததற்குத் துணை போனவர்கள் யார்? அதிகாரிகளை மிரட்டியது யார்? அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்தது எதற்கு? இந்த விவகாரத்தில் ஏன் சிபிஐ விசாரணை கேட்கக்கூடாது என்ற நிலையும் உள்ளது என்பதை நாங்கள் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது; அப்போது நிலைமை தெரியவரும்” என்று தெரிவித்துள்ளார்.
எஃப்.ஐ.ஆர் (FIR) எப்போது பதிவு செய்யப்பட்டது என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “பொதுவாக இது போன்ற விஷயங்களை ‘பப்ளிக் டொமைனில்’ (Public Domain) வெளியிடுவது இல்லை. இந்த வழக்கில் பத்திரிகைகளில் வரும் செய்திகள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்பது எவ்வளவு முக்கிய நோக்கமோ, அதுபோலத் தனி ஒருவருடைய மனம் புண்படாமல் இருப்பதும், கௌரவமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நீதிமன்றத்திற்கு அக்கறை உள்ளது; அதில் எங்களுக்கும் அக்கறை உள்ளது. ஆனால், நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
நாங்கள் இது தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுங்கள் என்று எஸ்.பி., தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. என எல்லோருக்கும் மனு கொடுத்தோம். எங்களுக்குப் பதில் வரவில்லை; எனவேதான் நாங்கள் நீதிமன்றத்தை நாடினோம். நீதிமன்றத்தை நாடி நல்லதொரு தீர்ப்பையும், நியாயத்தையும் ஒரு அதிகாரிக்குப் பெற்றுத் தந்திருக்கிறோம். அந்தத் திருப்தியோடு நாங்கள் இருக்கிறோம்.
நான் அரசியலுக்காக இதைச் சொல்லவில்லை. நீதிமன்றம் இதை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ‘போஷ்’ (POSH) கமிட்டியில் அவர் புகார் அளிக்க வேண்டும்; ஆனால், அவர்தான் அந்தக் கமிட்டிக்குத் தலைவர். எவ்வளவு அநியாயம்! அவருக்கே இது நடந்ததால் புகார் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “எம்எல்ஏ கைது செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், இந்தக் குற்றத்தை மறைப்பதற்குத் துணை போன அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது? உயர் பொறுப்பில் இருப்பவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சரால் காப்பாற்ற முடியும் என்றால் எங்கே சட்டம் இருக்கும்? யார் கேட்பார்கள்? அந்தக் கேள்வியை நான் மக்கள் முன்பாக வைக்கிறேன்.
முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்குப் பொறுப்பு. முதலமைச்சர் ஒன்றும் பேசவில்லை என்பதற்காக விட்டுவிடுவோம் என்று நினைக்காதீர்கள். அவர் அமைதியாக இருந்தால், குற்றம் புரிந்தவருக்குத் துணையாக இருந்தார் என்றுதான் அர்த்தம். எம்எல்ஏ அருள் விக்னேஷை முதல்வர் மாமல்லபுரத்தில் சந்தித்தாரே, அவர் மீது நடவடிக்கை எடுத்தாரா? எடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் முதலமைச்சரும் குற்றவாளிதான்” என்றார்.









