மதுரை ஆட்சியருக்கு நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள துணிச்சல் போல : திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!

By Kavi

|

Published on 24 Nov 2026, 3:34 PM

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், பக்தர்களின் மத உரிமைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தடையாக இருக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

கார்த்திகை தீபத்திருநாளான இன்று மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்புக் கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நவம்பர் 23ஆம் தேதி இரவு 9:00 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை 163 பி என் எஸ் எஸ் பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 

ADVERTISEMENT

அதில், ”உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20 ஆம் தேதி உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். 

மதுரை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு என்பது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது” என்று தெரிவித்திருந்தனர். 

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 24)விசாரணைக்கு வந்தது. 

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிபதிகள் உத்தரவுபடி மதியம் 12.30 மணிக்கு ஆஜராகவில்லை. 

ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர், “இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளதால், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. அதேபோன்று சர்ச்சைக்குரிய அந்த தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஒருமுறை நடவடிக்கையாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆட்சியர் தற்போது வேறு பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வழக்கை மூன்று மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்

இதைக் குறிப்பிட்டு பேசிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவரது வழக்கறிஞரின் வாதத்தை கேட்க போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

மதுரை ஆட்சியர் பிற்பகல் 1.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். 

அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜரானார். 

தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”நிஷாந்த் (மதுரை ஆட்சியர்) உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ளும் அளவுக்கு துணிச்சலானவர் என்றால் இருக்கட்டும்… ஆனால் எந்த அடிப்படையில் நீங்கள் இந்த தடை உத்தரவை பிறப்பித்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். 

கடந்த ஆண்டு அந்த தூணில் தீபம் ஏற்றாமல் இருக்க என்ன நடந்ததோ அதேபோன்றுதான் இப்போதும் நடக்கிறது. பக்தர்களின் மத உரிமையை பாதுகாக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மறுபரிசீலினை செய்ய வேண்டும். இந்த உத்தரவால் அனைத்தும் சீர்குலைந்து விடும். அரசியலமைப்புச் சட்ட பிரிவு 25 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்துவதற்கு இடையூறாக இருக்க வேண்டாம். 

உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது. அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படுத்த உத்தரவிட எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று இந்த வழக்கை மீண்டும் 4 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel