ஆபாச குறுஞ்செய்தி: எம்.எல்.ஏ.வின் பதவியைப் பறிக்க தவெக தயாரா? – வேல்முருகன்

By Pandeeswari Gurusamy

|

Published on 24 Nov 2026, 2:03 PM

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சட்டம் பொருந்தாதா? ஆட்சியரின் புகார் மீது காவல்துறை எடுத்த உடனடி நடவடிக்கை என்ன?குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.எல்.ஏ.வின் பதவியைப் பறிக்க தமிழக வெற்றிக் கழகம் தயாரா என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாசமான மற்றும் தேவையற்ற வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ளக் குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்துவந்த மாவட்ட ஆட்சியர், 23.11.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான புகார் அளித்துள்ளதாகப் புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேவையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும், அரசு இல்லத்திற்குள் அத்துமீற முயன்றதாகவும், புகாரில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிக்கே இத்தகையத் தொல்லை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினர் இதனை மறுத்துள்ள நிலையில், புகாரின் உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கைக் கோரியுள்ளது. மேலும், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, நவம்பர் 23 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகார் வரவில்லை என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் பிற்பகலில் ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாகப் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுகளின் காலவரிசை மற்றும் அரசுத் தரப்பின் விளக்கம் குறித்து முழுமையான தெளிவு அளிக்கப்பட வேண்டும்.

மேலும், காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சட்டமன்ற உறுப்பினர் மீது தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், தமிழகத்தின் சாதாரணப் பெண்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

ஆட்சியர் நேரடியாகப் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை ஏன் வழக்கின் தற்போதைய நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயங்குகிறது?

தேசிய மகளிர் ஆணையமே தலையிட்ட பிறகும், விசாரணையை விரைவுபடுத்த அரசு ஏன் முன்வரவில்லை?

இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷின் பதவியைப் பறிக்கவும், விசாரணை முடியும்வரை கட்சிப் பொறுப்பிலிருந்து விலக்கவும் தமிழக வெற்றிக் கழகத் தலைமைக்கு துணிவில்லையா?

குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத்தர அரசு தயாரா?

புகார் அளித்த பெண் அதிகாரியின் டிஜிட்டல் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட்டு, சாட்சிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் விசாரணை நடைபெறுவதை அரசு உறுதிப்படுத்துமா?

குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினரை விசாரணை முடியும் வரை கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பது தொடர்பாகவும் சட்டம் அனுமதிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ஏற்படும் சட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால், பதவியைத் தொடர எந்தச் சலுகையும் வழங்கக்கூடாது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் கிடைக்கக்கூடிய மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்ய வேண்டும். அரசியல் செல்வாக்கு, கட்சிப் பதவி, அதிகார பலம் என எதுவும் சட்ட நடவடிக்கைக்குத் தடையாக இருக்கக் கூடாது.

பெண்களின் பாதுகாப்பு என்பது தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதி மட்டுமல்ல. அது ஓர் அரசின் அடிப்படைக் கடமை. ஒரு பெண் அரசு அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியாத ஆட்சியாளர்கள், ஒட்டுமொத்தப் பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்யப் போகிறார்கள்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel