பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதோடு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சியில் எம்எல்ஏக்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று ஆளும்கட்சி எம்எல்ஏ மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி வந்தனர்.
தவெக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், “கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்” என அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
இந்நிலையில்தான், பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்பதும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு எனது ஆட்சியில் யாரும் தப்பிவிட முடியாது” என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏவைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முதலமைச்சரே பாதுகாக்க முயற்சித்தது அம்பலமாகிவிட்டதால், இந்த வழக்கை அவரது தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளார்.









