ராஜினாமா செய்தால் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் இருந்து தப்ப முடியுமா? சபாநாயகர் இழுத்தடிக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்கு!

By Mathi

|

Published on 24 Nov 2026, 4:37 PM

Supreme Court- MLAs MPs

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டால் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்ப முடியுமா என்ற முக்கியமான கேள்வியை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இடம்பெற்றுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி., அந்தக் கட்சியிலிருந்து விலகுவது அல்லது கட்சியின் கொறடா உத்தரவை மீறிச் செயல்படுவது போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

ADVERTISEMENT

இத்தகைய தகுதி நீக்க மனுக்கள் மீது சட்டப்பேரவை சபாநாயகர் அல்லது மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் ஆகியோர் முடிவெடுக்கின்றனர். ஆனால், கட்சித் தாவல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள் சிலர், தகுதி நீக்க நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவோ அல்லது நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதோ தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை என்னவாகும்? ராஜினாமா செய்துவிட்டதால் கட்சித் தாவல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏ.சேது என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு ராஜினாமா செய்வதன் மூலம் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்புவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் முடிவெடுப்பதில் ஏற்படும் காலதாமதமும் இந்த நடைமுறைக்குச் சாதகமாக அமைவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.எல்.ஏ.வின் தகுதி நீக்கம் குறித்து முடிவெடுப்பதற்குள் சட்டசபையின் பதவிக்காலமே முடிந்துவிடலாம்; இடைத்தேர்தல் நடைபெற்றுவிடலாம்; சில நேரங்களில் ஆட்சியே கவிழ்ந்துவிடலாம் அல்லது ஆட்சி தப்பித்துவிடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தகுதி நீக்க நடவடிக்கையின் நோக்கமே பயனற்றதாகிவிடுகிறது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகையால் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தாலும் அந்த நடவடிக்கை முடிவுக்கு வந்துவிடக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

ஏற்கனவே கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான ஸ்ரீமந்த் பாலாசாகேப் பாட்டீல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில், பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் மட்டும் ஏற்கெனவே தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கை தானாக முடிவுக்கு வந்துவிடாது என உச்சநீதிமன்றம் விளக்கியிருந்தது. எனவே, கட்சித் தாவல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்த பிறகு ராஜினாமா செய்வதைச் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்கான வழியாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்

கட்சித் தாவல் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க அதிகபட்ச காலவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, தகுதி நீக்க மனுக்கள் மீது பொதுவாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மணிப்பூர் சட்டப்பேரவை தொடர்பான கெய்ஷாம் மேகச்சந்திர சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்தக் காலவரம்பைச் சட்டப்பூர்வமாக நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தற்போதைய மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சித் தாவல் தகுதி நீக்க மனுக்களை விசாரிப்பதற்குச் சபாநாயகருக்குப் பதிலாக நிரந்தர தீர்ப்பாயம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேபோல தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பாகவும் மனுவில் முக்கியமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்க விவகாரம் அவர்களுக்குச் சாதகமாக முடிவடையும் வரை அல்லது மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் வரை, அரசியலமைப்பின் குறிப்பிட்ட பிரிவுகளுக்குட்பட்ட அமைச்சர் பதவி உள்ளிட்ட ஊதியம் பெறும் அரசியல் பதவிகளில் அவர்களை நியமிக்கக் கூடாது என்று மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ராஜினாமா கடிதங்கள், தகுதி நீக்க மனுக்கள், விசாரணை விவரங்கள் மற்றும் உத்தரவுகளை உரிய நேரத்தில் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

டிசம்பர் 4-ந் தேதி விசாரணை

இந்த பொதுநல மனு நேற்று (நவம்பர் 23) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஏ.சேது சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் ஆஜராகி வாதிட்டார்.

விசாரணைக்குப் பின்னர், இந்த மனு மீது டிசம்பர் 4-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ஒரு கட்சியின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டால், அதனால் ஏற்படும் தேர்தல் செலவுகளை அவரிடமிருந்து வசூலிக்கக் கோரிய மற்றொரு வழக்குடன் இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel