திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தூணில் வழக்கம்போல இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ”வெற்றிவேல்! முருகனுக்கு அரோகரா!” சரணகோஷங்களுடன் தீபத்தைத் தரிசித்து வழிபட்டனர். அதேநேரத்தில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தமிழக அரசு தீபம் ஏற்றாததைக் கண்டித்தும் சிலர் கோஷங்களை எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், நவம்பர் 24-ந் தேதி தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 20-ந் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிட மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் பகுதியில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது, அனுமதியில்லாத நபர்கள் மலையில் ஏறுவதைத் தடுப்பதற்காகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு முரணாக வேறு எந்த அதிகார அமைப்பும் அறிவுரை வழங்கினாலும் மாவட்ட ஆட்சியர் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் மலை மீது ஏற்றப்படும் தீபத்தைத் தரிசிப்பதற்கும் தடை விதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம்
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தூணில் வழக்கம்போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்படுவதைக் காண மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். மலை மீது தீபம் ஏற்றப்பட்டதும், கிரிவலப் பாதையில் நின்றிருந்த பக்தர்கள் தீபத்தை நோக்கி வழிபாடு செய்தனர்.
அப்போது, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” சரண கோஷங்களை பக்தர்கள் விண்ணதிர எழுப்பினர். அதேநேரத்தில், சர்வே கல் தூணில் தமிழ்நாடு அரசு தீபம் ஏற்றாதத்தைக் கண்டித்தும் சில பக்தர்கள் கண்டன முழக்கம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது.









