திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது..
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் 144 தடை விதிக்கப்பட்டது. 5,000 அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் நோக்கி வந்த பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், எல் முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே 144 தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்டி சுமதி அமர்வு விசாரித்தது. இன்று பிற்பகல் 4 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வந்த போது, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆஜரானார்.
இதைத்தொடர்ந்து அரசு சார்பில், “கோயிலில் வழிபாடு நடத்துவதை நாங்கள் தடை செய்யவில்லை. மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் மட்டுமே 258 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் இருப்பது தீபத்துன் அல்ல, கல் தூண். இதில் அரசு உறுதியாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தூணில் இன்று மாலை தீபம் ஏற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்பதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளில் தெளிவுபடுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகள் வேற யாராவது வழங்கினால் அதை மாவட்ட ஆட்சியர் ஏற்கக்கூடாது. புறக்கணிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக, கடந்த 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கடமை உள்ளவர்கள்” என்று தெரிவித்தனர்.
அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில், உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
வழக்குப் பின்னணி
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, நவம்பர் 24-ந் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த 3 நாட்களுக்குள் உச்சநீதிமன்ற உத்தரவு எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த சுருக்கமான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் போகலாம் என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு
உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ந் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நவம்பர் 23-ந் தேதி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாசட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்தத் தடை உத்தரவைப் பயன்படுத்தி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தடுக்கலாம் என்றும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் தீப தரிசனம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மனுதாரர்கள் அச்சம் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர்கள், அதேபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த மனுக்களில் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதை உறுதிசெய்ய வேண்டும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் தீப தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஒரு மனுவில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) உதவியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஆட்சியர்
இந்த 5 மனுக்களும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ் நேரில் ஆஜரானார். அப்போது, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.
”திருப்பரங்குன்றம் மலையில் அனுமதியில்லாத நபர்கள் ஏறுவதைத் தடுப்பதற்காக மட்டுமே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்றியுள்ளதாகவும், தொடர்ந்து பின்பற்றுவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். இதனை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது.
ஆட்சியர் யாருக்குப் பதிலளிக்க வேண்டும்?
இந்த வழக்கில் நீதிபதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவை சுட்டிக்காட்டினர். இந்தப் பிரிவின்படி இந்தியாவில் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.
அதாவது, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு அரசுத் துறை அதிகாரிகளும் நீதித்துறை அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டியது அரசியலமைப்புக் கடமையாகும். மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு சிவில் அதிகாரி என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 144-வது பிரிவு அவருக்கு நேரடியாகப் பொருந்தும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் வெளிப்படையாக மீறியதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியருக்கு அவரது கடமையை மீண்டும் நினைவூட்ட வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.
“He shall ignore any contra advice given by any other authority.” அதாவது, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வேறு எந்த அதிகார அமைப்பும் அறிவுரை வழங்கினாலும், மாவட்ட ஆட்சியர் அதை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதே நீதிபதிகளின் உத்தரவு.
மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய பொது ஊழியர் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மறுஆய்வு மனு தாக்கல் செய்தால் உத்தரவை நிறைவேற்ற வேண்டாமா?
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
ஆனால், அந்த மறுஆய்வு மனுவில் உச்சநீதிமன்றம் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு உரிமை உள்ளது. ஆனால், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினர்.
இதற்காக Israr Ahmad Khan v. Amarnath Prasad (2026 SCC OnLine 322) என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டினர். அந்த வழக்கில் நீதிபதிகள் அமானுல்லா, ஆர்.மகாதேவன் ஆகியோர், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம்; ஆனால் அந்த உத்தரவை முதலில் நிறைவேற்ற வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று தெரிவித்திருந்தனர்.
அதேபோல Reliance Industries Ltd. v. Vijayan வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் இனிகோ விஜயன், திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என்று பின்னர் கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்
மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 163-வது பிரிவு தடை உத்தரவு, பக்தர்களின் மதச் சுதந்திர உரிமையைப் பாதிக்கக்கூடும் என்ற வாதமும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் விளக்கம் அளித்தார்.
பக்தர்கள் வழக்கம்போல திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி கிரிவலம் செல்லலாம் என்றும், மலையடிவாரத்தில் உள்ள பிரதான கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றம் அருகேயுள்ள யானைமலையிலும் குறைந்தது 3 இடங்களில் தீபம் ஏற்றப்படுவதாகவும், அந்தத் தீபங்கள் அதிகாலை வரை எரிவதாகவும் குறிப்பிட்டனர். இவ்வாறு மலை மீது ஏற்றப்படும் தீபத்தைத் தரிசிப்பதற்காக இரவு நேரத்தில் மலையைச் சுற்றிவரும் பக்தர்களைத் தடுத்தால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திர உரிமையைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பக்தர்கள் கிரிவலம் செல்வதையோ, மலை மீது ஏற்றப்படும் தீபத்தைத் தரிசிப்பதற்கான இடங்களில் கூடுவதையோ தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில், அனுமதியின்றி யாரும் மலையின் மீது ஏறக்கூடாது என்றும் தெளிவுபடுத்தினர்.
இந்த விவகாரத்தில் Gulam Abbas v. State of Uttar Pradesh (AIR 1981 SC 2198) என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். அந்த வழக்கில், ஒரு தரப்பினரின் சட்டப்பூர்வமான உரிமையை மற்றொரு தரப்பினர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக மட்டும் அந்த உரிமையைத் தடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் விளக்கியிருந்தது. எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் என்பதற்காக, நிர்வாகத்திற்கு வசதியாகச் சிறிய பிரிவினரின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது முறையான அதிகாரப் பயன்பாடாக இருக்காது என்பதே அந்தத் தீர்ப்பின் சாராம்சம்.
இந்தக் கோட்பாட்டைத் திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்கலாம். கடுமையாகக்கூட விமர்சிக்கலாம். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கூடாது என்று வெளிப்படையாக அழைப்பு விடுப்பதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுமாறு அழைப்பு விடுப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் ஜான் டோ தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (ஜான் டோ தடை என்பது -அடையாளம் தெரியாத அல்லது பெயர் குறிப்பிடப்படாத நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஒரு தற்காலிகத் தடையுத்தரவு)
உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது உயர்நீதிமன்றம் விசாரிக்கலாமா?
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் மற்றொரு முக்கியமான வாதத்தையும் முன்வைத்தார். திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான விவகாரம் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், உயர்நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வாதிட்டார்.
உச்சநீதிமன்றமே தனது உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இந்த வாதத்திற்கு ஆதரவாக Union of India v. Jaiswal Coal, All India Judges’ Association v. Union of India உள்ளிட்ட 5 தீர்ப்புகளை அவர் மேற்கோள் காட்டினார்.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், சாதாரண சூழ்நிலைகளில் தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டிருப்போம் என்று தெரிவித்தனர். ஆனால், நவம்பர் 24-ந் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் அங்கு விசாரணை நடைபெறவில்லை.
மேலும், மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவு முந்தைய இரவில்தான் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டிய நாளிலேயே உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாவிட்டால், பின்னர் அந்த வாய்ப்பை மீண்டும் வழங்க முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனால்தான் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் கோர வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுகளுடன் விளையாடக் கூடாது
இந்த விவகாரத்தில் Deokinandan Prasad v. State of Bihar (1983) 4 SCC 20 என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். அந்தத் தீர்ப்பில், நீதிமன்றம் எடுத்துள்ள முக்கியமான முடிவுகளை அரசு விருப்பம்போலக் கையாள அனுமதிக்க முடியாது என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர்கள் ஆகியோருக்கு உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகத் தெரிவித்தது. அதிகாரிகளுக்கு அவர்களது அரசியலமைப்புக் கடமைகளை மட்டுமே நினைவூட்டியுள்ளதாகவும், அதற்கு மேல் எதையும் செய்யவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விடுவிக்க அறிவுறுத்தல்
விசாரணையின் இறுதியில், காவல்துறையால் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நபர்கள் குறித்தும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். குறிப்பாக, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர்களைத் தாமதமின்றி விடுவிக்க வேண்டும் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 மனுக்களும் முடித்துவைப்பு
உச்சநீதிமன்ற உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மனுக்களை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அரசியலமைப்புக் கடமையை அதிகாரிகளுக்கு நினைவூட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். இதையடுத்து 5 மனுக்களையும் முடித்துவைத்தனர்









