திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள ‘சர்வே கல்’ தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை!

By Mathi

|

Published on 24 Nov 2026, 6:37 PM

Thiruparankundram Karthigai Deepam Survey Pilar

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள ‘சர்வே கல்’ தூணில் இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கு பதிலாக வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் கடந்த நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. நவம்பர் 24-ந் தேதி அந்தத் தூணில் ஒருமுறை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த உச்சநீதிமன்றம், இதனை ஆண்டுதோறும் தீபம் ஏற்றுவதற்கான நிரந்தர உரிமையாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியது. மேலும், தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிட மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவை பொறுப்பு அதிகாரியாக நியமித்தது. நிகழ்ச்சி முடிந்த 3 நாட்களுக்குள் உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணை

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நவம்பர் 23-ந் தேதி திருப்பரங்குன்றம் பகுதியில் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தடை உத்தரவால் உச்சநீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாமல் போகலாம் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.

நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, அனுமதியில்லாத நபர்கள் மலையில் ஏறுவதைத் தடுப்பதற்காகவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்கு முரணாக வேறு எந்த அதிகார அமைப்பும் அறிவுரை வழங்கினாலும் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் மலை மீது ஏற்றப்படும் தீபத்தைத் தரிசிப்பதற்கும் தடை விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

வழக்கமான தூணில் தீபம் ஏற்றம்- சர்வே கல் தூணில் ஏற்றவில்லை

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, மலை மீது ஏற்றப்பட்ட தீபத்தைத் தரிசித்து வழிபட்டனர்.

ADVERTISEMENT

ஆனால், உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகேயுள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜக மற்றும் இந்து அமைப்பினர், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தபோதிலும், தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அத்துடன் போலீசார் தடையை மீறி சிக்கந்தர் தர்கா உள்ள குன்றின் மீது ஏறவும் பாஜகவினர் முயற்சித்தனர். ஆனால் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel