திருப்பரங்குன்றம் தீபம்: பாஜகவினரை ‘வேற’ மாதிரி டீல் செய்த விஜய் அரசு! வைரலாகும் ‘லத்தி’ பேனர்!

By Mathi

|

Published on 24 Nov 2026, 8:37 PM

Thiruparankundram Karthigai Deepam Police

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போலீசார் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 24) தர்கா அருகே உள்ள அந்த சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை 6 மணியளவில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.

குறிப்பாக, போராட்டக்காரர்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் போலீஸ் தடுப்புகளுக்கு மேலே சிவப்பு நிறத்தில் பெரிய எச்சரிக்கைப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அந்தப் பதாகையில், “நீங்கள் கூடியிருப்பது சட்ட விரோதமான கூட்டம். உடனே கலைந்து போங்கள். இல்லாவிட்டால் லத்தியால் அடித்து கலைக்க நேரிடும்” என்று வெள்ளை நிற எழுத்துகளில் எச்சரிக்கை இடம் பெற்றிருந்தது. இந்த பேனர்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த படத்தை பகிர்ந்துள்ள தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “தொடர்ந்து இந்து விரோத அராஜக செயல்களை செய்து கொண்டு இருப்பது உங்கள் ஜோசப் விஜய் அரசு..!” எனவும் விமர்சித்துள்ளது பாஜக,.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel