எத்தனை ‘ஜோசப்’கள் எங்களை அடக்க நினைத்தாலும்… விஜய்க்கு தமிழக பாஜக ’வார்னிங்’

By Mathi

|

Published on 24 Nov 2026, 8:55 PM

Thiruparankundram Karthigai Deepam TN BJP Vijay

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், “எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது” என்று முதல்வர் விஜய்யை மறைமுகமாகக் குறிப்பிட்டு தமிழக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 24) தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றத்தில் போலீசார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன், போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கும் பதாகைகளையும் வைத்தனர்.

இந்தச் சூழலில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்லாமியப் படையெடுப்பாளர்களைப் பார்த்த மண். ஆங்கிலேய அடக்குமுறையைத் தூக்கியெறிந்த மண். தடைகளை உடைப்பதும், கயவர்களை வீழ்த்துவதும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பதும் எங்களுக்குப் புதிதல்ல. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்படும் தீபம் எங்கள் வழிபாட்டு உரிமையின் அடையாளம். எத்தனை ஜோசப்கள் தடைகளை விதித்து எங்களை அடக்க நினைத்தாலும், எங்கள் உரிமைக்கான அறப்போராட்டம் ஓயாது! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அரசு சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய பிரச்சினையை விலைக்கு வாங்கியுள்ளதாக பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தமிழக பாஜகவும் முதல்வர் விஜய்க்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஜய் பதவி விலக வேண்டும்

தமிழக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடந்த ஆண்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் அன்றைய திமுக அரசு அடக்குமுறைகளை ஏவியது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தீபத் தூணில் தீபம் ஏற்றாமல், ஜோசப் விஜய் அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. திமுக அரசு பின்பற்றிய அதே இந்து விரோதப் போக்கை, ஜோசப் விஜய் அரசும் செய்திருக்கிறது.

ADVERTISEMENT

முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்து கோயில்களுக்கு சென்று வழிபட்டது எல்லாம், இந்துக்களை ஏமாற்ற நடத்தப்பட்ட நாடகம் என்பது, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தீபத் தூணில் தீபம் ஏற்றாததன் மூலம் உறுதியாகியுள்ளது. மாற்று மதத்தை சேர்ந்தவரான ஜோசப் விஜய், பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை, இந்து கடவுள்களை, இந்து சம்பிரதாயங்களை மட்டும் எதிர்க்கும் கட்சிகளின் வரிசையில் தவெகவும் சேர்ந்திருக்கிறது. இந்துக்களுக்கு ஆதரவானது என்றால், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கேட்க மாட்டோம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் செயலில் காட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுத்தாதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவே காரணம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல், இந்துக்களை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தையும் அவமானப்படுத்திய முதல்வர் ஜோசப் விஜய் பதவி விலக வேண்டும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும். அதற்கான காலம் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel