திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உச்சிப்பிள்ளையார் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் சண்முகசுந்தரம், துணை ஆணையர்/ செயல் அலுவலர் செல்வி, அறங்காவலர்கள் ராஜாபாண்டியன், அழகப்பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச்சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள், பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகமவிதிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, திருக்கோயிலில் காலகாலமாக கடைபிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
இத்தகைய நீண்ட காலத்தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices) சமய மரபுகள் மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை திருக்கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, நமது திருக்கோயிலில் காலகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானீகர்களின் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இத்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேற்கண்ட அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி, இத்திருக்கோயிலில் திருக்கார்த்திகை மகாதீபமானது, இத்திருக்கோயில் மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இடமான, மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் இன்று 24.11.2026 மாலை 06.00 மணியளவில் ஏற்றப்பட்டது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









