திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள முதல்வர் விஜய் அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்.
சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் ‘வலைபின்னல் அரசியல்’
வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும். ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூகநல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன்: முருகப்பெருமானின் சிரசின் மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது.
திருப்பரங்குன்றம் கோவிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்.
வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி! பக்தர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள். இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிபிஎம் பெ.சண்முகம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாக ஏற்றப்பட்டு வந்த உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கல்தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் இந்த ஆண்டும் வழமைபோல் ஏற்றப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மரபுகளையும், பாரம்பரியத்தையும் பின்பற்றும் வகையிலும், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் தவெக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.
சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டலுக்கும் திசைதிருப்பல்களுக்கும் இரையாகாமல் வழக்கம்போல் மக்கள் திருக்கார்த்திகை விழாவை கொண்டாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு திருக்கார்த்திகை விழாவின் போது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த ஆண்டும் அதேபாணியில் தேவையில்லாமல் இப்பிரச்சனையில் தலையிட்டது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது வரம்புமீறி உள்நோக்கத்துடன் செயல்படும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
மதவெறி சக்திகளின் சதி செயல்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்: தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய குழுவினர் மட்டுமே கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெறும் நபர்கள் யார், எத்தனை பேர் இடம்பெற வேண்டும் என்பதை கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும்.
மேலும், இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மலைக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகளையும் மதுரை மாநகர காவல் ஆணையர் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் மரபுகள், சடங்குகள் மற்றும் ஆகம விதிகளின்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வழக்கமான ஏற்பாடுகளின்படி இன்று மாலை 6 மணிக்கு அங்கேயே கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
நமது தொன்மையான பாரம்பரியங்கள், சமய வழிபாட்டு முறைகள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகிய அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். அவை அமைதியான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கார்த்திகை தீபத்தின் ஒளி திருப்பரங்குன்றத்தை ஒளிரச் செய்வதுடன் தமிழ்நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளம் பெருக வழிவகுக்கட்டும்.
வெற்றி வேல்! வீர வேல்!.









