திருப்பரங்குன்றம் மலையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத நிலையில், சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய பிரச்சினையை விஜய் அரசு விலைக்கு வாங்கியுள்ளதாகவும், சட்ட ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடும் என்றும் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் எச்சரித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இன்று (நவம்பர் 24) தர்கா அருகே உள்ள சர்வே கல் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
இந்த விவகாரத்தில் விஜய் அரசை பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக அரசின் ஓர் அங்கமாக இருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர், உச்சநீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பதிலாக உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இதனால் பண்பாட்டு ரீதியிலும் சட்ட ரீதியிலும் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடும். தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பிரச்சினையை விஜய் அரசு தானாகவே விலைக்கு வாங்கியுள்ளது” என்று எச்சரித்துள்ளார்.
சட்ட அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்
தமிழக சட்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவையும் மேற்கோள்காட்டிய பி.எல்.சந்தோஷ், “சில கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக பக்தர்களின் மனதைப் புண்படுத்தியதுடன், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளீர்கள். உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக மீறியுள்ள அரசின் சட்ட அமைச்சராக நீங்களே இருக்கிறீர்கள். சில நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான பக்தர்களை ஏமாற்றிவிட்டீர்கள். தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்!” என்றும் விமர்சித்துள்ளார்.









