131 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ்.. 26 தொகுதிகளை தரும் சமாஜ்வாதி? 5 வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்த அகிலேஷ்!

By Mathi

|

Published on 24 Nov 2026, 11:51 PM

UP Election Congress SP Akilesh Yadav

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 131 தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளை மட்டுமே வழங்க சமாஜ்வாதி கட்சி முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எழுதிய பகிரங்க கடிதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்ற இரு கட்சிகளான நாம் ஒன்றிணைந்து, மதவாத பாஜகவையும் அதன் குறுகிய சிந்தனை கொண்ட கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்து, தவறானவர்களின் கைகளில் சிக்கி நாடு சீரழிவதைத் தடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு இந்த முறை நமக்குக் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

மக்களின் எதிர்பார்ப்புகளையும் கள யதார்த்தங்களையும் கருத்தில் கொண்டு, நமது கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறுவதை உறுதி செய்ய நீங்களும் நாங்களும் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

நீங்களும் நாங்களும் போட்டியிடும் தொகுதிகளில், தோல்வியடையும் தொகுதிகளைவிட வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். வெற்றிதான் தொகுதிப் பங்கீட்டுக்கு மதிப்பைத் தரும். ஏனெனில், நாம் வெற்றி பெறும் தொகுதிகள்தான் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்.

ADVERTISEMENT

உங்கள் குழு வழங்கிய முன்னுரிமைப் பட்டியலில் இன்று நாம் விவாதித்த 26 தொகுதிகளைத் தவிர, வெற்றி வாய்ப்புள்ள மற்ற அனைத்துத் தொகுதிகளையும் அடையாளம் கண்டு எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அதன்பின்னர் நாம் ஒன்றாக அமர்ந்து எந்தெந்த தொகுதிகளில், எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர் என்பதை மதிப்பிடுவோம். நமது மதிப்பீடு மற்றும் வெற்றிக்கான தேர்தல் கணக்குகளின் அடிப்படையில், காங்கிரஸ் இதுவரை பரிசீலிக்காத பல வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக்கூட அக்கட்சிக்கு நம்மால் அடையாளம் காட்ட முடியும்.

ADVERTISEMENT

மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசும்போது, ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் அல்லது சமாஜ்வாதி வேட்பாளர் என்பது குறித்த விவாதமாக இல்லாமல், ‘இந்தியா கூட்டணி வேட்பாளர்’ யார் என்பது குறித்த விவாதமாக இருக்க வேண்டும். நமது வேட்பாளர்களை ‘‘பிடிஏ வேட்பாளர்கள்’ (பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினரை உள்ளடக்கிய சமூகக் கூட்டணியின் வேட்பாளர்கள்) என முன்னிறுத்துவதே மிகவும் சிறப்பான முடிவாக இருக்கும்.

லோக்சபா தேர்தலில் பிடிஏவுக்கு உங்கள் கட்சி அளித்த முழுமையான ஆதரவு எப்போதும் பாராட்டுக்குரியது. அந்த ஆதரவால்தான் மதவாத பாஜகவை நாம் ஒன்றிணைந்து தோற்கடித்தோம். இந்த முறையும் நாம் கைகோர்த்து முதலில் உத்தரப்பிரதேசத்திலும், பின்னர் மத்தியிலும் பாஜகவைத் தோற்கடிப்போம்.

பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்ற செய்தி, ஒவ்வொரு நகரத்திலும், குடியிருப்புப் பகுதியிலும், தெருவிலும், கிராமத்திலும் சென்றடைந்துள்ளதை கள ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

அதனால்தான் மாநிலம் முழுவதும் அனைத்துச் சமூகங்களையும், அனைத்துத் தரப்பினரையும் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, துயரத்துக்குள்ளான, அவமதிக்கப்பட்ட மக்கள் பாஜகவுக்கு எதிராகத் திரண்டுள்ளனர். ‘என்டிஏவை பிடிஏதான் தோற்கடிக்கும்; பிடிஏதான் மாற்றத்தைக் கொண்டுவரும்’ என்று அவர்கள் அனைவரும் நம்புகின்றனர்.

உண்மையில், ‘நீங்கள் – நாங்கள்’ என்ற அடிப்படையில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை. இதனைத் தொகுதிப் பங்கீடு என்று அழைப்பதைவிட, தொகுதிப் பகிர்வில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது என்றே அழைக்க விரும்புகிறோம்.

சிக்கலான தேர்தல் கணக்குகளைக் கொண்ட தொகுதிகளில் குறைந்தபட்சம் 2 வேட்பாளர்கள் குறித்து நாம் ஒன்றாக விவாதித்து, அதிக வெற்றி வாய்ப்புள்ள ஒருவரைத் தேர்வு செய்து, அவரை வெற்றி பெறச் செய்ய இணைந்து பணியாற்றுவோம்.

கூட்டணிக்குள் ஒருவர் மீது மற்றொருவர் வேட்பாளர்களைத் திணிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான் உங்களது வாக்குகள் எங்களுக்கும், எங்களது வாக்குகள் உங்களுக்கும் கிடைத்து வெற்றி உறுதியாகும். ஏற்கெனவே நாம் கூறியதை நாளையும் ஒன்றாகச் சொல்ல முடியும்.

ஆட்சி அமைப்பதுதான் நமது மிகப்பெரிய பொதுவான இலக்கு. புதிய சூழ்நிலைகளையும் தேர்தல் கணக்குகளையும் கருத்தில் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்காக நீங்களும் நாங்களும் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்து, சிலருக்கு இடமளிக்க வேண்டியிருக்கும்.

நீங்களும் நாங்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக ஓரிருவருக்கு வாக்குறுதி அளித்திருக்கலாம். ஆனால், உண்மையான கள நிலவரத்தைக் கருத்தில் கொண்டு 2 அல்லது 4 தொகுதிகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு தொகுதியும் முக்கியமானது என்பதைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்குத் தொகுதி கிடைக்கவில்லை என்றாலோ, அவர் விரும்பிய தொகுதி கிடைக்கவில்லை என்றாலோ மனம் தளரக் கூடாது.

அவர்களது கட்சியின் மூத்த தலைவர் சில விட்டுக்கொடுப்புகளையோ, மாற்றங்களையோ செய்திருந்தால், அதன் பின்னணியில் இருப்பது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற சிந்தனைதான்.

ஆட்சி அமைந்த பிறகு அனைவருக்கும் உரிய மரியாதையும் இடமும் கிடைக்கும். ஒவ்வொரு மூத்த தலைவரும் தாம் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார். அந்த அளவுக்குத் தங்களது தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

இத்தகைய அணுகுமுறையுடன் தேர்தலைச் சந்திக்கும்போது, உங்களது கட்சியும் எங்களது கட்சியும் இணைந்து, நமது ஒருங்கிணைந்த பலத்தால் 806 தொகுதிகளுக்குத் தேர்தல் பணிகளை மேற்கொண்டதற்குச் சமமான வலிமையைப் பெற்றுள்ளோம் என்று கூற முடியும்.

இந்த நாட்டின் மக்கள், குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள், சிறு மற்றும் பெரு வணிகர்கள், நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், முற்போக்குச் சிந்தனை கொண்ட, மதச்சார்பற்ற, ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த பிடிஏ சமூகத்தினர் என அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களையும் எங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.

பரஸ்பரம் விட்டுக்கொடுத்து, எந்தத் தவறுக்கும் இடமளிக்காமல், நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் தருணத்தில் நாம் இருக்கிறோம். நல்லெண்ணத்துடனும் விவேகத்துடனும் இதனை நாம் நிச்சயம் சாதிப்போம்.

இந்த நம்பிக்கையுடன், தொகுதிகளின் எண்ணிக்கையைவிட வெற்றிக்கான தேர்தல் கணக்குகளுக்கு நீங்களும் நாங்களும் முக்கியத்துவம் அளிப்போம்.

இதன் மூலம் நாம் வெற்றி பெறுவோம். முதலில் உத்தரப்பிரதேசத்திலும், பின்னர் டெல்லியிலும் நமது ஆட்சி அமையும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நமது பங்களிப்பு வரலாற்றில் என்றென்றும் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

5 வேட்பாளர்களை அறிவித்த அகிலேஷ் யாதவ்

இதனிடையே 5 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை சமாஜ்வாதி கட்சி இன்று (நவம்பர் 24) இரவு வெளியிட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸுடன் 2-வது சுற்று பேச்சுவார்த்தையை நிறைவு செய்த சில மணி நேரங்களிலேயே இந்த பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

இந்த 5 வேட்பாளர்களில் 4 பேர் முஸ்லிம்கள். ஜோதி லோதி பிற்படுத்தப்பட்ட லோதி சமூகத்தைச் சேர்ந்தவர். ஜோதி லோதியைத் தவிர மற்ற 4 பேரும் தற்போதைய சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள்.

காங்கிரஸ் கேட்ட 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிப்பு

தற்போது சமாஜ்வாதி வேட்பாளர்களை அறிவித்துள்ள 5 தொகுதிகளில் பெஹட், சகாரன்பூர் ஆகிய 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கேட்டிருந்தது. 2024-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சகாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இம்ரான் மசூத் வெற்றி பெற்றிருந்தார். காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் 2 சுற்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel