முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சரவணன் ஆகிய 3 பேரையும் ஒன்றாக 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 25) உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த அக்டோபர் 26-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நவம்பர் 10-ந் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று (நவம்பர் 24) நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அன்பில் மகேஷ் தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், திமுக ராஜ்யசபா எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ஜாமீன் மனுவை விசாரிக்க அரசு எதிர்ப்பு
இந்த விசாரணையின் தொடக்கத்தில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நவம்பர் 25-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. அதுவரை ஜாமீன் மனுவை விசாரிக்கக் கூடாது என்றார்.
இதற்கு நீதிபதி, ஜாமீன் மனு எப்போது தாக்கல் செய்யப்பட்டது? போலீஸ் காவல் கோரும் மனு எப்போது தாக்கல் செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து வாதிட்ட பி. வில்சன், போலீஸ் காவல் கோரும் மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி ஜாமீன் மனுவை விசாரிக்காமல் இருக்க முடியாது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் (BNSS) 480-வது பிரிவின்படி ஜாமீன் மனுவை விசாரிக்க எந்தச் சட்டத் தடையும் இல்லை என்றார்.
30 நாட்களாக சிறையில் அன்பில் மகேஷ்
மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல் வாதிடுகையில், அன்பில் மகேஷ் 30 நாட்களாக சிறையில் உள்ளார். அவரை மேலும் சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக அன்பில் மகேஷ் பணம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. மாஜிஸ்திரேட் முன்பு சிலர் அளித்த வாக்குமூலத்தைத் தவிர அவருக்கு எதிராக வேறு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் இப்போது எம்.எல்.ஏ. கூட இல்லை
அன்பில் மகேஷ் தற்போது எம்.எல்.ஏ.வாகக் கூட இல்லை. ஆனால் அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைத்துவிடுவார் என்று போலீசார் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அவர் சாட்சிகளைக் கலைக்க முயன்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் அபாயமும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
லஞ்சம் கொடுத்தவர்கள் மீது ஏன் வழக்கு இல்லை?
இதனைத் தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், மாஜிஸ்திரேட் முன்பு லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தவர்களும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 8-வது பிரிவின்படி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு லஞ்சம் கொடுத்திருந்தால், லஞ்சம் கொடுத்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் காவல்துறையிடமோ விசாரணை அமைப்பிடமோ புகார் அளித்தால் மட்டுமே அவருக்கு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு கிடைக்கும். ஆனால் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தவர்களை இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கவில்லை. சட்டப்படி அவர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான். அவர்களது வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அன்பில் மகேஷுக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்றும் பி. வில்சன் வாதிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அதிகாரம் இல்லை
மேலும், 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட 173-வது அரசாணையின்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மட்டுமே விசாரிக்க முடியும். ஆனால் அன்பில் மகேஷ் மீதான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இது மிக முக்கியமான சட்டரீதியான குறைபாடு என்றும் பி. வில்சன் வாதிட்டார்.
நவ. 27-ந் தேதி அரசுத் தரப்பு வாதம்
அன்பில் மகேஷ் தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மீண்டும் போலீஸ் காவல்? இன்று உத்தரவு
இதனிடையே அன்பில் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார், சரவணன் ஆகிய 3 பேரையும் ஒரே நேரத்தில் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளிடமிருந்து பணம் வசூலித்தது யார்? எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? அந்தப் பணம் யாருக்குச் சென்றது? இந்த முறைகேட்டில் அரசுத் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் உஷாராணி போலீசார் தரப்பில் ஆஜராகி வாதிட்டார்.
ஏற்கனவே 3 பேரிடமும் போலீசார் போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டதாகவும், அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் போலீஸ் காவல் கோரப்படுவதாகவும் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் உள்ளிட்டோர் வாதிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, இந்த மனு மீது இன்று (நவம்பர் 25) உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.









