பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். Pongal Special Bus full details
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்க இன்று (ஜனவரி 8) தலைமை செயலகத்தில், அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம், பூந்தமல்லி புறவழிச்சாலை மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றோடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த ஆண்டு பேருந்துகள் இயக்கப்படும்.
ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்களும், நாள் ஒன்றுக்கு 2,100 பேருந்துகள் வீதம் மொத்தம் 6,300 பேருந்துகளும், சென்னையில் இருந்து அந்த 3 நாட்களும் 4,706 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். எனவே, சென்னையில் இருந்து மட்டும் 11,006 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பிற ஊர்களில் இருந்து 8,408 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி மொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்படும்.
பெங்களூரு செல்லும் எஸ்.இ.டி.சி பேருந்துகள், ஈசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி வரை செல்லும் பேருந்துகள் ஆகியவை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எஸ்.இ.டி.சி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
பொங்கல் முடிந்து திரும்பி வர ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை வழக்கமாக தினசரி இயக்கும் 2,100 பேருந்துகளுடன் நாளொன்றுக்கு 4,830 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படும்.
www.tnstc.in என்ற இணையதள வாயிலாகவும் டிஎன்எஸ்டிசி செயலி மூலமாகவும் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் 9445014450 மற்றும் 9445014436 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணுக்கும், 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
எங்கிருந்து எங்கு செல்லும் பேருந்துகள்!
கோயம்பேடு
ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், தற்போது கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன.
இங்கிருந்து விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி கோட்டைத்தைச் சேர்ந்த பேருந்துகள், குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழித்தடங்களிலும் திருச்சி கரூர் வழித்தடங்களிலும், மதுரை திருநெல்வேலி வழித்தடங்களிலும் தூத்துக்குடி திருச்செந்தூர் வழித்தடங்களிலும் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.
போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயங்கும்.
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர் காட்டுமன்னார்குடி வழியே சிதம்பரம் பேருந்துகளும் இங்கிருந்து இயங்கும்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்)
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்
பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம்
பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம்
திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். (தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாகச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தடங்கள்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முதலீட்டாளர் மாநாடு… எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்?: ஸ்டாலின் விளக்கம்!
மொத்தமாக 1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்திய நிறுவனம்?
Pongal Special Bus full details