கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Rs 6.64 lakh crore capital investment received
சென்னை நந்தம்பாக்கம் வரத்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கோலகலமாக நேற்று (ஜனவரி 7) தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். வின்பாஸ்ட், டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் மூலம் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடாக பெறப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தரங்குகள் மற்றும் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து மாலை நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இமாலய சாதனை செய்த டி.ஆர்.பி.ராஜா
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் முதல்வர் என்ற முறையில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநாட்டை இந்தியாவே வியக்கும் வகையில் முதலீட்டை ஈர்த்து, இதயத்தில் நீங்கா இடத்தை பெற்று விட்டார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட குறுகிய காலத்திலேயே இமாலய சாதனை செய்திருக்கும் அவரை பாராட்டுகிறேன். தலைமைச்செயலாளர் முதல் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்!
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் ’முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் நடத்தப்பட்ட மாநாடு மூலம் 1.93 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது. அதன்மூலம் 2.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில், ரூ.7,441 கோடி முதலீடு பெற்றோம்.
அதோடு தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதை நான் கண்காணித்து வந்தேன். அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். இதன்மூலம் 74,757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்த முதலீடு ரூ.6.64 லட்சம் கோடி!
அந்த நம்பிக்கையுன் சொல்கிறேன் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இது நினைவுக்கூறப்படும். இந்த மாநாட்டின் தனித்துவம், புதுமை என்றென்றும் பேசப்படும்.
நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே அன்பு கட்டளையிட்டேன். உலகிலேயே முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு அதுவே முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
தமிழ்நாடு அரசின் அயராத உழைப்பு மற்றும் உங்களின் பங்களிப்பு காரணமாக இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இந்த முதலீடுகள் மூலம் நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில் 14,54,712 பேருக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 12,35,945 பேருக்கும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மேம்பட்ட மின்னனுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின்வாகனங்கள், வான்வெளி பாதுகாப்பு, தரவு மையங்கள் மற்றும் திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் என்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடு வந்துள்ளது.
ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடுகளில் உற்பத்தி துறைகளில் மட்டும் ரூ.3,79,809 கோடி, எரிசக்தி சார்பாக ரூ.1,35,157 கோடி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக ரூ.62,939 கோடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக ரூ.22,130 கோடி மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாக ரூ 63,573 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
விரைவில் 1 டிரில்லியன் முதலீடு பெறும்!
இந்த முதலீடுகள் அனைத்தும் மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றவும், இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக இருக்க வேண்டும் என்றும் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை விரைவில் அடைவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொலைநோக்கு போர்வையோடு தொழில் கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலமாக தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்து செல்வது தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உகந்த பாதை.
இதுவரை 20க்கு மேற்பட்ட கொள்கைகளை வெளியிட்டு அந்த துறைகளில் உற்பத்தி மட்டுமல்லாமல், ஏற்றுமதியையும் வெகுவாக பெருக்கிடும் வகையில், முதலீடுகளை கணிசமாக ஈர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரித்து வருகிறோம்.
அதன் தொடர்நடவடிக்கையாக தான் தொடக்கவிழா நாளில் மின்னனு உற்பத்தி மற்றும் செமி கண்டக்டர் கொள்கையை வெளியிட்டேன். இது அந்த துறைகளில் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்.
மிகப்பெரும் உட்கட்டமைப்பு திட்டங்கள் மேற்கொள்ளும்போது, அதற்கான முதலீடுகள் முழுவதையும் அரசே மேற்கொள்வது கடினம். கூட்டு முயற்சியில் தனியார் துறைகளுடன் இணைந்து செயல்படுவது தான் நடைமுறையில் சாத்தியம்.
அந்த வகையில், அப்படிப்பட்ட முதலீடுகளை ஈர்க்க, தனியார் மற்றும் அரசு துறைகளுடன் சிறந்த நடைமுறைகளை இணைத்து பொது, தனியார் கூட்டாண்மை கொள்கையையும் வெளியிட்டுள்ளேன்.
அமைச்சர் தலைமையில் சிறப்பு குழு!
தமிழ்நாடு அரசு மீதும், திமுக அரசின் கொள்கைகள் மீதும் முதலீட்டாளர்களாகிய நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்களது தலையாய கடமை.
அரசை பொருத்தவரைக்கும், நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் இருந்து, உங்களுடைய எல்லா செயல்களுக்கும் உறுதுணையாக நிற்கும். உங்களுக்கு தேவையான எல்லா அனுமதியும் ஒற்றைசாளர அமைப்பு மூலமாக விரைந்து வழங்கப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும். அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து அதை முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு இந்த குழு தீவிரத்துடன் வேலை செய்யும்.
இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக 9 பங்காளர் நாடுகள் அரங்குகள் அமைத்து இந்த மாநிலத்துடனான நீண்டகால ஈடுபாட்டை வெளிபடுத்தினார்கள். சிறப்பு அரங்குகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில்வலிமை மற்றும் பன்முகத்தன்மையை பல்வேறு அரசு நிறுவனங்கள் வெளிபடுத்தியுள்ளது.
நான் முதல்வன் திட்டம் மற்றும் கல்லூரிகள் மூலமாக மாணவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தங்களுக்கான வலுவான பாதையை அமைத்துக்கொள்ள இந்த மாநாடு நிச்சயம் அவர்களுக்கு உதவும்.
உலகநாடுகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்!
நிறைவாக, இந்த மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் முதலீடு மேற்கொண்டுள்ள அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை இங்கு முதலீடு செய்யாதவர்களும் முதலீடு செய்ய முன்வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.
உங்கள் எல்லோரையும் தொழில்முனைவோராக மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் நல்லெண்ண தூதுவர்களாக பார்க்கிறேன். எனவே தமிழ்நாட்டை உலகிற்கு அறிமுகம் செய்து, உலகநாடுகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!
மொத்தமாக 1500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இந்திய நிறுவனம்?
Video: திடீரென கன்னத்தில் விழுந்த அறை… ஜெயிச்சிட்டா உங்களுக்கு கண்ணு தெரியாதே!
Rs 6.64 lakh crore capital investment received