கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைதுக்கு முன் ராஜினாமா?

By Mathi

|

Published on 25 Nov 2026, 7:51 AM

Kallakurichi Arul Vignesh

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் நேற்று (நவம்பர் 24) சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த 5 பிரிவுகளில் 3 பிரிவுகள் ஜாமீன் பெறுவதை உரிமையாகக் கோர முடியாத பிரிவுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஐ.ஜி. அந்தஸ்திலான காவல்துறை அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்றும், டிசம்பர் 22-ந் தேதிக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையை காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி காமினி ஐபிஎஸ் கண்காணிப்பார் என அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள 3 வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (நவம்பர் 24) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

ADVERTISEMENT

இந்த விசாரணை தொடர்பான ஆவணங்கள் புதிய விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்கிடம் இன்று (நவம்பர் 25) ஒப்படைக்கப்பட உள்ளன.

கைதுக்கு முன் ராஜினாமா?

இந்த நிலையில் அருள் விக்னேஷ் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அருள் விக்னேஷ் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

ராஜினாமாவுக்குப் பின் கைது?

அருள் விக்னேஷ் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவரை போலீசார் கைது செய்யக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

அதாவது, எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது அருள் விக்னேஷ் கைது செய்யப்படுவதைவிட, அவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் கைது செய்யப்படுவது தவெகவுக்கு அரசியல் ரீதியாக ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையிலான ‘டேமேஜ் கண்ட்ரோல்’ நடவடிக்கையாக இருக்கும் என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

இதனால் எம்.எல்.ஏ. பதவியை அருள் விக்னேஷ் ராஜினாமா செய்தவுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel