விஜய் ஆட்சிக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் சதி.. வைகோ பகீர்!

By Mathi

|

Published on 25 Nov 2026, 9:11 AM

Vaiko Vijay

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை முடக்குவதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் சதி செய்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், விஜய் அரசு மீது அம்புகள் பாய்ந்தால், பதிலடி கொடுக்க தம்மிடம் எண்ணற்ற அம்புகளும் ஆதாரங்களும் இருப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (நவம்பர் 24) மாலை மதிமுகவின் சென்னை மண்டலம் சார்பில் ‘கவிக்கடல் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் வைகோவின் நாடாளுமன்ற ஆங்கில உரைகள் அடங்கிய ‘Vaiko in Parliament’ நூல் சென்னையில் மறுவெளியீடு செய்யப்பட்டது. குமுதம் குழும உரிமையாளர் பா. வரதராஜன் நூலை வெளியிட, ஓய்வுபெற்ற டிஜிபி ஏ.எக்ஸ். அலெக்சாண்டர், திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அமைச்சர்களிடம் நான் பேசுவதே இல்லை

இந்நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது: நான் அடிக்கடி முதலமைச்சரிடம் பேசுவது கிடையாது. அமைச்சர்களிடமும் பேசுவது கிடையாது. எந்தத் தனிப்பட்ட சிபாரிசுக்காகவும் இந்த வைகோ, இந்த அமைச்சரவையில் யாரிடமும் சிபாரிசு செய்வது கிடையாது. ஆனால் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறேன்.

ADVERTISEMENT

ஐஏஎஸ் அதிகாரிகள் சதி

மாதாமாதம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இருக்கிறார்கள். நேர்மையான அதிகாரிகளை நான் குறிப்பிடவில்லை. மாதாமாதம் நம்முடைய கஜானாவுக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்தது விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் நின்றுபோய்விட்டதே; இந்த அரசாங்கத்தை முடக்க வேண்டும்; கோப்புகளை நகரவிடக்கூடாது எனச் செயல்படுகிற ஐஏஎஸ் அதிகாரிகளின் கும்பல் இருக்கிறது. அவர்களுடைய பெயர்கள் எனக்குத் தெரியும். நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முயற்சியில் வெற்றி பெற மாட்டார்கள்.

கோபெருஞ்சோழன் – பிசிராந்தையார் போல விஜய்யும் நானும்

மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு ஒரு யோக்கியமான எம்.எல்.ஏ. என்பதை நான் தெரிந்து வைத்திருக்கிறேன். அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவரது இறுதி ஊர்வலத்திலும் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.

ADVERTISEMENT

விஜய்யும் நானும் பக்கத்துப் பக்கத்தில் ஒருவருடைய கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்தோம். காலில் செருப்பு அணியாமல் விஜய் நடந்ததால், செருப்பு அணிந்துகொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர் பரவாயில்லை, என்னால் நடக்க முடியும் என்றார்.

புறநானூற்றில் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் நட்பு குறித்த பாடலை அவரிடம் எடுத்துச் சொன்னேன். நீங்கள் துன்பத்தில் இருக்கிறீர்கள். இப்படி ஒரு எம்.எல்.ஏ.வை இழந்து நிற்கிறீர்கள். நண்பன் என்றால் துன்பத்தில் வந்து நிற்க வேண்டும். அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று விஜய்யிடம் சொன்னேன்.

வி.எஸ்.பாபு இறுதி ஊர்வல சர்ச்சை

நானும் விஜய்யும் ஒருவருடைய கையை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்தபோது, பின்னாலிருந்து ஒருவர் என்னுடைய கையைப் பிடித்து விலக்கினார். கொஞ்சம் பின்னால் வாருங்கள் என்றார். நான் உன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போ என்று சொன்னேன். இதுதான் நடந்தது.

அவர் அமைச்சர் என்றே எனக்குத் தெரியாது. எல்லா அமைச்சர்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? முதலமைச்சருடன் 12 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். அதைப் பற்றிச் செய்தி வெளியிடாமல், ஒரு அமைச்சருடன் வைகோ சண்டை போட்டார் என்று எழுதுகிறார்கள். தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிகைகளுக்கும் மனச்சாட்சியே கிடையாதா?

விஜய் அரசு மீது அம்புகள் பாய்ந்தால்..

ரொம்ப சந்தோஷம். இன்னும் போடுங்கள் என்னைப் பற்றி. என்னுடைய அம்பறாத்தூணியில் இன்னும் ஏராளமான அம்புகள் இருக்கின்றன. விஜய் அரசு மீது அம்புகள் பாய்ந்தால், என்னிடம் இருக்கிற அம்புகளின் எண்ணிக்கை எண்ண முடியாதவை. என்னிடம் உள்ள ஆதாரங்கள் எண்ண முடியாதவை.

நான் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன். அந்தக் கூட்டணியைப் பற்றி வெளியில் விமர்சித்தது கிடையாது. உள்ளே விமர்சித்திருக்கிறேன். திமுகவில் இருக்கும்போது பல விஷயங்களை விமர்சித்திருக்கிறேன். ஆனால் வெளியில் சொன்னது கிடையாது.

விஜய் அரசுக்கு கவசமாக…

இன்றைக்கு விஜய்யோடு இருக்கிறேன். அவருடைய அரசாங்கத்தைக் காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரைக்கும் திட்டித் தீர்ப்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். நான் அவருடைய அரசாங்கத்தைப் பாதுகாக்கிறேன். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறேன். என்னுடைய வில்லும் அம்பும், கேடயமும் வாளும், என்னுடைய தோழர்களும் தம்பிமார்களும், நாங்கள் இன்று இருக்கிற இடத்தைப் பாதுகாக்கக் கவசமாக, அரணாக இருப்போம். இவ்வாறு வைகோ பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel