திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் தமிழர்கள் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து நிற்பார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அதே நேரத்தில், நவம்பர் 24-ந் தேதி மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், அதற்கான இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.
இதனடிப்படையில் நேற்று (நவம்பர் 24) தர்கா அருகே உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்றப்படாமல், உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாஜகவினர், தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.
பி.எல். சந்தோஷ் குற்றச்சாட்டு
இது தொடர்பாக நேற்று பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தமது எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, சர்வே கல் தூணுக்குப் பதிலாக உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றியுள்ளதாகவும், விஜய் அரசு சட்ட மற்றும் பண்பாட்டு ரீதியான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பி.எல். சந்தோஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரை விமர்சித்த பி.எல். சந்தோஷ், சில கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளீர்கள்; உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறியுள்ளீர்கள். கோடிக்கணக்கான பக்தர்களை ஏமாற்றிவிட்டீர்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட ‘திருப்பரங்குன்றம்’ நூலில் இடம்பெற்றுள்ள தீபத்தூண் குறித்த தகவல்களையும் பி.எல். சந்தோஷ் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
இதற்குப் பதிலடியாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஐ.டி. விங் தொண்டர்களைப் போலக் கையில் கிடைப்பதையெல்லாம் ஆராயாமல் எடுத்துப் பதிவிடுவதே ஒரு தேசியப் பொதுச்செயலாளருக்கு அழகா?
ஒரு பொறுப்புள்ள தேசியப் பொதுச்செயலாளராக, உண்மைத் தன்மையை முழுமையாகச் சரிபார்த்து, தமிழகத்தின் வரலாற்றையும் திருப்பரங்குன்றம் மலையின் உண்மை நிலையையும் புரிந்துகொண்டு பதிவிடுங்கள்.
தொல்லியல் துறை புத்தகத்தை முழுமையாகப் படியுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட ‘திருப்பரங்குன்றம்’ புத்தகத்தின் 129-வது பக்கத்தை முழுமையாகப் படியுங்கள்.
நாயக்கர் காலத்து அந்தத் தீபத்தூணில், “கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடதுபக்கம் திருப்பிக் கொண்டிருப்பதாகச் சிற்பமும் உள்ளது. இத்தீபத்தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும்…” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் சுட்டிக்காட்டிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே தீபத்தூணில்தான், அனுமன் சிற்பமும் நாயக்கர் காலக் கல்வெட்டும் கொண்ட, முருகப்பெருமான் மூலஸ்தானத்துக்கு நேர் மேலே அமைந்துள்ள அந்த அசல் தீபத்தூணில்தான், இந்து சமய அறநிலையத்துறை நேற்றைய அறிக்கையில் தெளிவுபடுத்தியபடியும், ஆகம விதிகளின்படியும் முறையாகத் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
சர்வே கல்லில் என்ன வரலாற்று ஆதாரம் இருக்கிறது?
ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட வெறும் ‘சர்வே கல்லை’ காட்டி, “இதோ இதுதான் தீபத்தூண், இதில் ஏற்றுங்கள்” என்று நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் அடம்பிடிப்பது எவ்வளவு பெரிய அறியாமை!
அந்தச் சர்வே கல்லில் அனுமன் சிற்பமோ, நாயக்கர் காலக் கல்வெட்டோ, எந்த வரலாற்று ஆதாரமோ கிடையாது என்பதுகூடவா தெரியவில்லை? திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் வந்து இந்த 2 இடங்களையும் கண்ணால் பார்க்காமலேயே, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டா!
எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும்…
ஆனால், இது தமிழ்நாடு; இங்கு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் உங்களின் எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது. எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தமிழர்கள் எப்போதும் சகோதரத்துவத்துடனும் விழிப்புணர்வுடனும் ஒன்றிணைந்து நிற்பார்கள் என்பதைத் தமிழக மக்களும் அரசும் தங்களின் அமைதியான அணுகுமுறையால் உங்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். இனியாவது வரலாற்றைத் திரித்துப் பொய்களைப் பரப்பும் வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.









