ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நடைப்பயிற்சி அவசியம். சிலர் நடைப்பயிற்சிக்காக நேரத்தைச் செலவிடுகிறார்களே தவிர, அதற்கான பலன்களை அனுபவிக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.
கீழ்க்கண்ட சில முக்கிய குறிப்புகள் உங்கள் நடைப்பயணத்துக்கு நல்வழி காட்டும்.
காலையில், காலைக்கடனை முடித்துவிட்டு நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்சினை இல்லாதவர்கள் நடைப்பயிற்சிக்குப் பதில், ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
40 வயதைக் கடந்தவர்கள், வயதானவர்கள் நடைப்பயிற்சி செல்லலாம். அதுவும் ‘பிரிஸ்க் வாக்’ எனப்படும் வேக நடைப்பயிற்சி செல்வது அவசியம். சாதாரணமாக நடப்பதால், எந்த பலனும் இல்லை. ‘பிரிஸ் வாக்’ செய்யும்போதுதான், உடலுக்கு அதிக அளவு நன்மை கிடைக்கும்.
நடக்கும்போது அருகில் உள்ளவரிடம் பேசுகிறோம் என்றால், நமக்கு மூச்சு வாங்கக் கூடாது. அப்படி மூச்சு வாங்குவதாக இருந்தால், நாம் மிகவும் வேகமாக நடக்கிறோம் என்று அர்த்தம். வேகத்தைக் குறைத்துக்கொண்டு, நடைப்பயிற்சியைத் தொடரலாம்.
ஒரே சாலையில் நடைப்பயிற்சி செல்வதற்கு பதில், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளலாம். இதனால் மனதில் சோர்வு ஏற்படாது.
புழுக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்யலாம். வசதியிருந்தால், நல்ல தரமான ட்ரெட் மில் இயந்திரத்தில் வாக்கிங் செய்யலாம்.
நடைப்பயிற்சி செய்யும்போது மூட்டுகள், தசைகள், எலும்புகள் வலுவடையும். எலும்பு உறுதியாக இருக்க, கால்சியம் அவசியம். உடற்பயிற்சி செய்வதால், கால்சியத்தை எலும்பு நன்கு கிரகிக்கும். இல்லையெனில் என்னதான் கால்சியம் சத்து மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அத்தனையும் வெளியேறிவிடும்.
நடைப்பயிற்சி என்பது 30 முதல் 45 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். மெதுவாக நடைப்பயிற்சியை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதேபோல், வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து நடைப்பயிற்சியை முடிக்க வேண்டும்.
பெண்கள், பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளையும் தாண்டி, தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடைக்கேற்ற காலணிகள் எது?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கலர் காஜா ரோல்
வெயில் நிவாரணம் வருமா? அப்டேட் குமாரு