விடுமுறை நாட்களில் வெளியில் சென்று வர நினைப்பவர்கள் இந்த கலர் காஜா ரோல்ஸ் செய்து எடுத்துச் செல்லலாம். கடைகளில் கிடைக்கும் தின்பண்டங்களை விட இது டேஸ்ட்டியாக இருக்கும். கலர்ஃபுல்லாக இருக்கும் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். colour Khaja roll recipe
என்ன தேவை
மைதா மாவு, சர்க்கரை – தலா ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
கலர் சுகர் சேமியா ஸ்பிரிங்கிள்ஸ் – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படி செய்வது colour Khaja roll recipe
சிறிதளவு மைதா மாவுடன் தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும், மீதமுள்ள மைதா மாவுடன் உப்பு, சிறிதளவு நெய்விட்டுப் பிசிறவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து பெரிய சப்பாத்தியாக இடவும். அதன் மீது அரிசி மாவு தூவி, பாய் போல சுருட்டவும் (அப்போதுதான் சுருள் மடிக்கும்போது ஒட்டாமல் வரும்), சுருளை முடிக்கும் இடத்தில் பிரியாமல் இருக்க மைதா பேஸ்ட் தடவி ஒட்டவும். இப்போது நீளமான உருளை கிடைக்கும். இதை இரண்டு இன்ச் அளவு துண்டுகளாக்கவும். ஒவ்வொரு துண்டிலும் சிறு அழுத்தம் தரவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மைதா மாவு துண்டுகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதுவே காஜா.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து இரண்டு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும்.
பொரித்த காஜாக்களைச் சர்க்கரைப் பாகில் போட்டு சில நிமிடங்கள் கழித்து எடுக்கவும். பாகு பொரித்த சுருளில் ஒட்டிக்கொள்ளும். பாகில் இருந்து வெளியே எடுத்த உடனே கலர் சேமியா கலவையில் காஜாக்களைப் புரட்டி எடுக்கவும். சுவையான, வண்ணமயமான காஜா ரோல் தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்
கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை
கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா