“விஜய்க்கு பதில் ராகுல் ” செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அட்வைஸ்!

Published On:

| By Kavi

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை ராகுல் காந்தி மீது வையுங்கள் என்று செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அறிவுரை கொடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஜனவரி 18) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “மதவாத சக்திகளை, இந்துத்துவா சக்திகளை ஒழிக்க தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவது நல்லது” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக நேற்று இரவு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ”சமீபத்தில் திராவிட கட்சித் தலைவர் ஒருவர் விஜய்யை அழைத்தார். தமிழகத்தில் காணாமல் போகும் நிலையில் இருக்கக்கூடிய கட்சிகள் எல்லாம் இன்று விஜய்யை துணைக்கு அழைத்துக்கொண்டிருக்கின்றன.

விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை தயவுசெய்து ஒரு 10 சதவிகிதம் ராகுல் காந்தி மீது வையுங்கள் என அறிவுரை கூறுவது எனது கடமை” என்று கூறினார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து பேசிய அவர், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், பெருமை. அதில் உலக தலைவர்கள் எல்லாம் கலந்துகொள்ள வேண்டும். துணை முதல்வரும், அவரது மகனும் பங்கேற்றது தவறல்ல. அவரது மகனை கொஞ்சம் பின் இருக்கையில் அமர வைத்திருக்கலாம்.

ஆட்சியரை எழுப்பிவிட்டு அவரது இருக்கையில் மகனின் நண்பர்களை அமரவைத்தது தவறு. அமைச்சர் மூர்த்தி நடந்துகொண்ட விதம் அநாகரிகம்.

அதிலும் ஆட்சியர் யாரும் என்னை வற்புறுத்தவில்லை என பதிலளித்தது முட்டாள் தனமானது. இது அவருக்கு அரசியல் லாபமாக இருக்கலாம். தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் கூட இருக்கலாம்.

சொல்லப்போனால் துணை முதல்வர் உதயநிதிக்கும், அமைச்சர் மூர்த்திக்கும் இடையே ஆட்சியர் அமர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்பநிதி உட்கார்ந்திருக்கிறார். அதைவிட்டுக்கொடுத்தது ஆட்சியர் செய்த தவறு. உங்கள் இருக்ககையை கூட காப்பாற்றமுடியவில்லை. இவர் மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை இருக்கும். மதுரையில் நடந்தது முற்றிலும் தவறு” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமரும் என்றும் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சென்னை திரும்பும் மக்கள் : இரவில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு!

பொங்கல் கொண்டாட்டம்: மது விற்பனையில் முதலிடம் பிடித்த மாவட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share