பொங்கல் பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களை கொண்டாடிவிட்டு வெளியூர்வாசிகள் சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர்.
பயணிகளின் வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த இரு தினங்களாகவே வெளியூர்களில் இருந்து பலரும் சென்னை திரும்பிய நிலையில், நேற்று இரவு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளிலும் ஏராளமானோர் பயணித்தனர்.
இந்தநிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு ஆய்வு செய்தார்.

முதலில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த அமைச்சர் சிவசங்கர், பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் குறைகள் ஏதேனும் இருக்கிறதா? முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டதா? என கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ கடந்த பொங்கலுக்கு மொத்தமாக 6.75 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது. சுமார் 8.75 லட்சம் பேர் பயணித்திருக்கிறார்கள்.
ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் அதிகம் பேர் பயணித்திருக்கிறார்கள்.
முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு முன்பதிவு செய்து பொங்கல் விடுமுறைக்காக பயணம் செய்தவர்கள் மொத்தமே 3 லட்சம் பேர்தான். இந்தாண்டு ஒரு வழியில் முன்பதிவு செய்து சென்றவர்களின் எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியுள்ளது. திரும்பி செல்வோரின் எண்ணிக்கையை சேர்த்தால் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
திருச்சியை தொடர்ந்து மதுரை வந்த அமைச்சர் சிவசங்கர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டாப் 10 செய்திகள் : காஸாவில் போர் நிறுத்தம் முதல் தமிழகத்தில் மழை வரை!
’ஆர்.என். ரவியை மாத்திடாதீங்க’ : அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்