கச்சா எண்ணெய் விலை குறைகிறது; பெட்ரோல் விலை உயர்கிறது: ஜி.ராமகிருஷ்ணன்

public

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்துள்ள நிலையிலும் கூட, நம் நாட்டில் மத்திய அரசு, பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில முன்னாள் செயலாளரும், தலைமைக் குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “ஏழை, எளிய, நடுத்தர மக்களின், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல். டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. இன்னும்கூட விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே இருப்பது மக்கள் விரோத செயலாகும்.

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனை பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே செயல்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 900 ரூபாயைத் தொட்டுவிட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது’’ என்றார்.

மேலும், “விவசாயிகளை பல வகைகளிலும் பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 10 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மறுத்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லை. விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இப்போதாவது முன்வர வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *