_மேலும் ஒரு பெரியார் சிலை அவமதிப்பு!

Published On:

| By Balaji

கோவையை அடுத்து திருக்கோவிலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்மைக் காலமாக தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலை நேற்றிரவு காவி சாயம் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டது.

சில நாட்களாக கந்த சஷ்டி கவசம் தொடர்பாக பெரியாரிய உணர்வாளர்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வருகிறது. இந்த நேரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு பெரியாரிய அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டுமென போராட்டங்களும் நடைபெற்றன.

இந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றியது தான் தான் என பாரத் சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் ( வயது 21) என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை அவமதிப்பு தொடர்பாக கலகம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழையூரில் பெரியார் சிலைக்கு இன்று பிற்பகல் மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து அவமதித்துள்ளனர். தகவலறிந்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள், சிலையை அவமதித்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “கோவையை அடுத்து திருக்கோயிலூர்: இன்று பிற்பகலில் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர். இது ஒரே கும்பலின் திட்டமிட்ட சதியா என போலீஸார் விசாரிக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

**எழில்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share