கொரோனா புதிய வடிவில் பரவுகிறது: மோடி எச்சரிக்கை

politics

கொரோனா வைரஸ் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கவில்லை, தனது வடிவத்தை மாற்றி மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேருக்கு உட்பட இதுவரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 35 ஆயிரத்து 771 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29 பேர் உட்பட ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் ராம நவமியை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதாகோயில் நிறுவன தின விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசும் போது, கொரோனா இன்னும் நம்மை விட்டு முழுமையாக நீங்கவில்லை, மாற்று வடிவத்தில் மீண்டும் தோன்றி பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளார்.

தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள அவர், “இடைநிறுத்தமாக வைரஸ் தொற்று பாதிப்பு இப்போது குறைந்திருக்கலாம். ஆனால் உருமாற்றம் அடைந்து மீண்டும் எப்போது பரவும் என்பது யாருக்கும் தெரியாது. வைரஸ் பரவலைத் தடுக்க இதுவரை 185 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த சாதனை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இது மக்களால் மட்டுமே சாத்தியமானது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸுக்கு எக்ஸ் இ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் ஓமிக்ரானை விட பத்து மடங்கு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதோடு இந்த வகை கொரோனா குஜராத் மற்றும் மும்பையில் தலா ஒருவருக்குப் பரவி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா எதுவும் பரவவில்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *