இரண்டொரு நாளில் திமுகவில் ஆபரேஷன்: ஸ்டாலின் எச்சரிக்கை!

politics

திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்று ஜனவரி 11 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்போது காங்கிரஸ்-திமுக இடையேயான கூட்டணிப் பிரச்சினை தீவிரமாக இருந்ததால் அதுபற்றித்தான் பேசப் போகிறார்கள் என்று திமுகவினர் நினைத்தார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஜனவரி 18 ஆம் தேதி அறிவாலயம் சென்று கூட்டணிக் குழப்பங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது.

இந்த நிலையில் அவசர செயற்குழுக் கூட்டம் எதற்காக என்ற கேள்விக்கு அக்கூட்டத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுகவின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் பேசிய பொருளாளர் துரைமுருகன், “கலைஞரோடு 55 ஆண்டுகள் பழகியிருக்கிறேன். தலைவருக்கு சற்றும் குறைச்சல் இல்லாத தலைவர் தளபதி என்பதை தலைவர் மறைந்த அடுத்த தினத்திலேயே நான் உணர்ந்துகொண்டேன். தலைவருக்கு மெரினாவை தரமாட்டேன் என்று அரசு மறுத்தபோது நீதிமன்றத்தை நாடி தலைவரை அவரது விருப்பப்படியே மெரினாவில் துயில் கொள்ள வைத்தாரே அப்போதே இவர்தான் தலைவர் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்” என்ற தனது வழக்கமான சென்டிமென்ட் பொடியை கூட்டத்தில் தூவிய துரைமுருகன்,

**கஞ்சன் ஜங்காவில் ஸ்டாலின்**

“நமது தளபதி அவர்கள் கழகத்தின் பொருளாளர் ஆனார் அது முதல் வெற்றி. செயல் தலைவர் ஆனார் இரண்டாவது வெற்றி, தலைவராகி எம்பி தேர்தல் மூன்றாம் வெற்றி, உள்ளாட்சித் தேர்தல் நான்காம் வெற்றி, அடுத்த வெற்றி ஐந்தாம் வெற்றி வரப் போகும் சட்டமன்றத் தேர்தல்தான். அதிலும் வெற்றி வாகை சூடுவார். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்பாக கஞ்சன் ஜங்கா என்றொரு சிகரம் வரும். அதுபோல் இப்போது நமது தலைவர் கஞ்சன் ஜங்காவில் நிற்கிறார். அடுத்து எவரெஸ்டுதான்” என்று கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.

துரைமுருகனை அடுத்து யாரும் பேசவேண்டாம் என்று சொல்லிய ஸ்டாலின் தானே மைக்கை கையிலெடுத்தார்.

“காங்கிரஸோடு கூட்டணி சர்ச்சை ஏற்பட்டபோது அவசர செயற்குழு என்று அறிவித்தார்களே. இப்போது என்ன அவசர செயற்குழு என்று நினைக்கலாம். இது அவசர செயற்குழுதான், அவசியமான செயற்குழுவும் கூட.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் பின் நமது கட்சியினரும் ஸ்டேட்மென்ட் விட்டார்கள். அதற்குப் பின், அவர்கள் அறிவாலயத்துக்கு வந்து வருத்தம் தெரிவித்தார்கள். நானும் பிறகு ஓர் அறிக்கை வெளியிட்டேன். அது அப்படியே இருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று காங்கிரஸ் சர்ச்சை பற்றி தொட்டுவிட்டுப் போன ஸ்டாலின்,

**கொங்குமண்டலத்தால்தான் ஆட்சியை இழந்தோம்**

“கொங்குமண்டலத்தால் தான் நாம் போன முறை ஆட்சியை இழந்தோம். இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி கொங்கு மண்டலத்தில் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. என்கிட்ட லிஸ்ட் இருக்கு. யார் யார் என்னென்ன செய்தீர்கள் என்ற பட்டியல் என்னிடம் இருக்கிறது. ஒவ்வொன்றாக ஒவ்வொருவராக வெளிப்படையாக சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். நமது இறுதி லட்சியம் சட்டமன்றத் தேர்தல்தான். அதற்காக மீதியிருக்கிற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றியடைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கை ஏன் உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் குறைந்தது?

**தலைமைக் கழக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை**

புண் இருந்தால் ஆற்றிவிடலாம். ஆற்ற முடியாத புண்ணாக இருந்தால் ஆபரேஷன் தான் செய்தாக வேண்டும். . ஓரிரு நாட்களில் நடவடிக்கை உறுதியாக எடுப்பேன். அந்த ஆபரேஷனைப் பற்றி தெரிந்து வைத்துக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறவர்களுக்கு சிபாரிசு செய்து யாராவது தலைமைக் கழக நிர்வாகிகள் என்னிடம் அணுகினால் அந்த தலைமைக் கழக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்” என்று ஆட்காட்டி விரலை உயர்த்தி எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களைக் கூப்பிட்டு ஏன், எதனால் தோற்றோம் என்று கேள்வி கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு அவர்கள் அளித்த பதில்களுக்குப் பிறகுதான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பற்றி மாவட்டச் செயலாளர்கள் அளித்த விளக்கம் அதற்கு ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன என்பதை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.

-**ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *