மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மிசா பாண்டியன் முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்!

By Mathi

|

Published on 5 Nov 2026, 10:06 PM

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனின் முன்ஜாமீன் மனுவையும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சரவணனின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (நவம்பர் 5) தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்தனர். இதையடுத்து சரவணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

இதே வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், முன்னாள் மண்டலத் தலைவர் பாண்டிசெல்வியின் கணவருமான மிசா பாண்டியன் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கர், மிசா பாண்டியனின் முன்ஜாமீன் மனுவையும் சரவணனின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு என்ன?

மதுரை மாநகராட்சியில் 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை வணிகக் கட்டடங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றின் சொத்து வரியை முறைகேடாகக் குறைத்ததன் மூலம் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ADVERTISEMENT

இந்த முறைகேடு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலைவர்கள், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் விஜயலட்சுமி, நகரமைப்புக் குழுத் தலைவர் மூவேந்திரன் ஆகிய 7 பேரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக் குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி மேயர் இந்திராணியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

உயர்நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் 13-ந் தேதி முன்னாள் மண்டலத் தலைவர் புவனேஸ்வரியின் கணவர் சரவணனும் கைது செய்யப்பட்டார். இதன்படி மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில்தான் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியனின் முன்ஜாமீன் மனுவையும், சரவணனின் ஜாமீன் மனுவையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (நவம்பர் 5) தள்ளுபடி செய்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel