காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம்- முதல்வர் விஜய்

By Mathi

|

Published on 5 Nov 2026, 8:14 PM

Kasimedu-Fishermen-CM Vijay

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன 9 மீனவர்களில் 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 சடலங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் இன்று (நவம்பர் 5) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்டோபர் 29-ந் தேதி விசைப்படகில் பக்கிரிசாமி என்ற சூர்யா (49), குப்பன் (48), மோகன் (47), ராஜேஷ் (52), முருகன் (48), குப்புசாமி (58), விஜயகாந்த் (44), அரவிந்த் (40), நாராயணன் (57) ஆகிய 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வழங்கிய புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, இவர்கள் ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக இருந்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 2-ந் தேதி இரவு நிஜாம்பட்டினத்திலிருந்து ராமையாபட்டினம் துறைமுகத்தை நோக்கி இவர்களது விசைப்படகு புறப்பட்டது. அப்போது நடுக்கடலில் படகின் என்ஜின் செயலிழந்தது. இது குறித்து அந்தப் படகிலிருந்த மீனவர்கள், நவம்பர் 3-ந் தேதி அதிகாலை வயர்லெஸ் மூலம் மற்றொரு விசைப்படகிலிருந்த மீனவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அதன் பின்னர் காணாமல் போன படகிலிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. படகு எங்கு இருக்கிறது என்பதையும் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து சென்னை மீன்பிடித் துறைமுக விசைப்படகுகள், ஆந்திர மாநில மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல்கள் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஆந்திர மாநில அதிகாரிகள் மற்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தத் தேடுதல் பணிகளின்போது ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோதப்பட்டினம் கடலோரப் பகுதியில் மோகன், முருகன், விஜயகாந்த் ஆகிய 3 மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தத் துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் மீட்கப்பட்டுள்ள 2 சடலங்களை அடையாளம் காணும் பணியையும், காணாமல் போன எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இதில் தலா ரூ.2 லட்சத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை அரசு செலவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel