தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு தமிழ்நாடு அரசு செயலற்றுக் கிடக்கிறதா? என முதல்வர் விஜய் அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிமுக ஐடிவிங் வெளியிட்ட பதிவு: காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் புயலில் சிக்கி மூன்று நாட்களாகக் காணாமல் போன நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் மீன்வளத்துறையும் அரசு நிர்வாகமும் அலட்சியமாகச் செயல்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ஆந்திரக் கடற்கரையில் சில மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
3 நாட்களாக மீனவக் குடும்பங்கள் போராடிய நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஏன் நேரில் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, காணாமல் போன மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்குமா?
மீனவர்களின் உயிரைக் காக்க வேண்டிய நேரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசும், மீன்வளத்துறை அமைச்சருமே மீனவர்கள் வடிக்கும் இந்த கண்ணீருக்கு முழுக் காரணம்!.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்: சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29ஆம் தேதி விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது மீனவர்கள், ஆந்திரக் கடற்பகுதியில் புயலில் சிக்கிக் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை படகிலிருந்து அபாயத் தகவல் கிடைத்த நிலையில், ஆந்திர மாநிலம் ஒங்கோல் அருகே நான்கு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த உடல்கள் காணாமல் போன மீனவர்களுடையவைதானா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மீதமுள்ள ஐந்து மீனவர்களின் நிலையும் இன்னும் கவலைக்குரியதாக உள்ளது.
மீனவர்கள் ஆபத்தில் சிக்கியதாகத் தகவல் கிடைத்தும், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதில் அரசுக்கு ஏன் காலதாமதம் ஏற்பட்டது? அபாயத் தகவல் கிடைத்தவுடன் தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் அதிகாரிகளும் நேரடியாகத் தலையிட்டு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நான்கு உடல்கள் கரை ஒதுங்கியதாகச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் அடையாளத்தை உறுதிப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? மீதமுள்ள ஐந்து மீனவர்களைக் கண்டறியத் தேடுதல் பணிகள் எந்த அளவில் நடைபெறுகின்றன?
பல ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் . இதற்கிடையில், ஆந்திரக் கடற்பகுதியில் ஆந்திர மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன. இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல், அண்டை மாநில மீனவர்களின் தாக்குதல், கடலில் காணாமல் போகும் அபாயம் எனத் தொடர் இன்னல்களைச் சந்திக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு போதிய அக்கறைக் காட்டாதது கடும் கண்டனத்திற்குரியது.
இன்னும் எத்தனை மீனவர்களின் உயிரைப் பலிகொடுத்த பிறகு, தமிழக அரசு விழித்துக்கொள்ளும்? உயிரிழந்தவர்கள் என அடையாளம் உறுதிப்படுத்தப்படும் ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் தகுதியுள்ள ஒருவருக்கு அரசுப் பணி வழங்கி, அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், இந்தச் சம்பவத்தில் எச்சரிக்கைத் தகவல் கிடைத்த நேரம் முதல் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதம் வரை முழுமையான விசாரணை நடத்தி, நிர்வாகக் குறைபாடுகள் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையின் அச்சுறுத்தல், ஆந்திரக் கடற்பகுதி மோதல்கள், இயற்கைப் பேரிடர்களில் சிக்கும்போது போதிய பாதுகாப்பு கிடைக்காத நிலை எனத் தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தமிழக மற்றும் ஒன்றிய அரசுகளின் பொறுப்பாகும்.
ஒன்பது மீனவர்களின் உயிரைக் காப்பாற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், எஞ்சிய மீனவர்களை மீட்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடும் அரசுப் பணியும் வழங்கவும், மீனவர்களின் பாதுகாப்பிற்கு நிரந்தரத் திட்டம் வகுக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.










